சாலைகளில் கட்சி கொடி கம்பங்கள் வைக்க கூடாது: ஐகோர்ட் கிளை மீண்டும் உத்தரவு
சாலைகளில் கட்சி கொடி கம்பங்கள் வைக்க கூடாது: ஐகோர்ட் கிளை மீண்டும் உத்தரவு
ADDED : மார் 06, 2025 01:46 PM

மதுரை: அரசியல் கட்சிகள் தங்கள் அலுவலகங்களில் கம்பம், கொடிகளை வைத்துக் கொள்ளுங்கள்; சாலைகளில் வைக்கக்கூடாது என ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகள் மற்றும் கொடிக்கம்பங்களை அவர்களின் சொந்த அலுவலகங்களில் நிறுவிக் கொள்ளலாம். பொது இடங்களில் அவற்றை நிறுவுவது ஏற்புடையதல்ல; அனுமதிக்க முடியாது' என, சென்னை ஐகோர்ட் மதுரைக்கிளை எச்சரிக்கை விடுத்தது.
பொது இடங்கள் , சாலையோரங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என ஐகோர்ட் மதுரைக் கிளை தனி நீதிபதி ஏற்கனவே உத்தரவு பிறப்பித்தார்.
இதனை எதிர்த்து அம்மாவாசிதேவர் என்பவர் மேல்முறையீடு செய்தார்.
இந்நிலையில் இந்த வழக்கை இன்று (மார்ச் 06) ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதிகள் விசாரித்தனர். அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
* கொடிக்கம்பங்களை அகற்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தவறில்லை.
* அரசியல் கட்சிகள் தங்கள் அலுவலகங்களில் கம்பம், கொடிகளை வைத்துக்கொள்ளுங்கள்.
* சாலைகளைப் பயன்படுத்தக் கூடாது; சாலையோரம் வைக்கப்பட்டுள்ள கட்சிக் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும்.
* மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள விஷயத்தில் ஜனநாயக உரிமையை கேட்க வேண்டாம்.
* சாலைகளில் தடையற்ற போக்குவரத்தும், பொதுமக்களின் பாதுகாப்பும் முக்கியம்.
* நெடுஞ்சாலைகளில் கட்சி கொடிகள், பிளக்ஸ் பேனர்கள், கொடி மரங்கள் வைக்க எந்த அனுமதியும் கிடையாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஐகோர்ட் கிளையின் இந்த உத்தரவால், இனி பொது இடங்களில் கட்சிகள் தங்கள் தலைவர்களின் சிலைகளை நிறுவ முடியாது. போக்குவரத்திற்கு இடையூறாக சிலைகள் அமையாது. ஏற்கனவே உள்ள சிலைகளும் அகற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.