விகடன் இணையதள முடக்கத்தை நீக்க மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
விகடன் இணையதள முடக்கத்தை நீக்க மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
ADDED : மார் 07, 2025 07:18 AM

சென்னை: 'பிரதமர் மோடி குறித்த சர்ச்சைக்குரிய கேலி சித்திரத்தை நீக்க வேண்டும்' என்ற நிபந்தனையுடன், விகடனின் இணையதளம் முடக்கப்பட்டதை நீக்கும்படி, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம், இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் அருகே, சங்கிலியால் கட்டப்பட்டு பிரதமர் மோடி அமர்ந்திருப்பதை போன்று, கடந்த மாதம் 10ம் தேதி, விகடனின் இணைய இதழான விகடன் ப்ளஸ்சில், கேலிச்சித்திரம் வெளியானது. இதனால், விகடன் இணையதளத்தை 25ம் தேதி முடக்கி, தொலைதொடர்பு துறை உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆனந்த விகடன் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது.விகடன் நிறுவனம் சார்பில், மூத்த வழக்கறிஞர் விஜய்நாராயண் ஆஜராகி, “டிஜிட்டல் பத்திரிகையின் இணையதளத்தை முடக்கி பிறப்பித்த உத்தரவு, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 19(2)ன் கீழ் வழங்கிய, பேச்சு மற்றும் சுதந்திரத்துக்கு எதிரானது.
''அரசியல்வாதியை விமர்சிப்பது, இறையாண்மையை மீறுவதாகாது. பல நாடுகளில், இதேபோல கேலிச்சித்திரங்கள் வெளியிடப்படுகின்றன,” என்றார்.
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, “விகடன் நிறுவனம் வெளியிட்ட கேலிச்சித்திரம், நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை மீறுவதாகும்.
''இது, இரு நாடுகளுக்கு இடையேயான உறவுக்கு, அச்சுறுத்தலாக அமைந்ததால் இணையதளம் முடக்கப்பட்டது,” என்றார்.
உடன் நீதிபதி, “கேலிச்சித்திரம் தேசத்திற்கு எதிரானது என்று கூறினாலும், முழு இணையதளத்தை எவ்வாறு தடை செய்ய முடியும்,” என, கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், “சர்ச்சைக்குரிய அந்த கேலிச்சித்திரத்தை துறையால் தடைசெய்ய முடியாது. அதை நீக்கினால் இணையதளத்தின் தடையை நீக்குவது குறித்து பரிசீலிக்கப்படும்,” என்றார்.
அதை ஏற்ற நீதிபதி, விகடன் நிறுவனம் அந்த சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரத்தை நீக்க வேண்டும் என்று கூறி, இணையதளத்துக்கு விதிக்கப்பட்ட தடையை, மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் நீக்க உத்தரவிட்டார்.
மேலும், மனுவுக்கு இரண்டு வாரங்களில் அமைச்சகம் பதில் அளிக்கும்படி கூறி, விசாரணையை தள்ளிவைத்தார்.