நீதிமன்ற கண்காணிப்பில் மோசடி வழக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்ற கண்காணிப்பில் மோசடி வழக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
ADDED : மே 03, 2024 02:16 AM
மதுரை:நீதித்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி, மோசடியில் ஈடுபட்ட வழக்கில், இருவரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, 'விசாரணையை கண்காணிக்க இந்த நீதிமன்றம் விரும்புகிறது. மூன்று வாரங்களுக்கு ஒருமுறை விசாரணையின் நிலை குறித்த அறிக்கையை பதிவாளரிடம் போலீசார் சமர்ப்பிக்க வேண்டும்' என, நேற்று உத்தரவிட்டது.
நீதித்துறையில் அரசுப் பணி வாங்கித் தருவதாக பொய்யான வாக்குறுதி அளித்து, ஒரு வழக்கறிஞரிடமிருந்து பணத்தை பெற்று மோசடி செய்ததாக சபரி கணேசன், ஷகிலா உட்பட சிலர் மீது மதுரை நகர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர். சபரி கணேசன், ஷகிலா முன்ஜாமின் மனு தாக்கல் செய்தனர்.
நீதிபதி பி.புகழேந்தி: முதற்கட்ட விசாரணை அறிக்கையை போலீசார் தாக்கல் செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட நபர்கள், நீதிமன்றங்களில் 16 பேருக்கு வேலை வாங்கித் தருவதாக பொய்யான வாக்குறுதி அளித்து, 48.97 லட்சம் ரூபாய் பெற்றதாக வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார்.
வங்கிக் கணக்குகள் மூலம் குறிப்பிட்ட தொகைக்கு பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது.
குற்றத்தின் தன்மையை கருதி, மனுதாரர்களுக்கு முன்ஜாமின் வழங்க விரும்பவில்லை.
மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. நீதித்துறை பெயரில் குற்றம் நடந்ததாக கூறப்படுகிறது.
விசாரணையை கண்காணிக்க இந்த நீதிமன்றம் விரும்புகிறது. மூன்று வாரங்களுக்கு ஒருமுறை விசாரணையின் தற்போதைய நிலை குறித்த அறிக்கைகளை, உயர் நீதிமன்றக் கிளை பதிவாளரிடம் போலீசார் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டார்.