கப்பல் மோதி மீனவர் பலியானதில் விசாரணை உயர்நீதிமன்றம் உத்தரவு
கப்பல் மோதி மீனவர் பலியானதில் விசாரணை உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜூலை 07, 2024 04:48 AM
மதுரை: ராமநாதபுரம் மீனவர் கன்னியாகுமரி கடலில் மீன் பிடித்தபோது கப்பல் மோதி பலியானது தொடர்பாக மும்பை கப்பல் போக்குவரத்து இயக்குனர் ஜெனரல் விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம் இரணியன்வலசை நாகம்மாள் தாக்கல் செய்த மனு:
எனது கணவர் முருகேசன். துாத்துக்குடியில் ஒரு விசைப் படகு மூலம் மீன் பிடித்து வந்தார். 2018 ஜன.,30 ல் சிலருடன் கன்னியாகுமரி கடல் பகுதியில் மீன் பிடித்தபோது, ஒரு சர்வதேச கப்பல் மோதியது.
விசைப் படகு மூழ்கியது. தலையில் அடிபட்டு கணவர் இறந்ததாக தெரிவித்தனர்.
கேரளா கடல் எல்லையில் விசைப்படகு மீனவர்கள் மீது இத்தாலிய கடற்படை கப்பல் மோதியது. 2 மீனவர்கள் பலியாகினர். இத்தாலிய கடற்படையினர் மீது வழக்கு பதிந்து, மீனவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி இழப்பீட்டை கேரளா அரசு பெற்றுத் தந்தது. எனது கணவர் மரணத்திற்கு காரணமான கப்பல் நிர்வாகத்திடம் விசாரிக்க வேண்டும். ரூ.1 கோடி இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி சி.சரவணன்: மனுதாரரின் குடும்பத்திற்கு 2021 ல் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கியதாக ராமநாதபுரம் கலெக்டர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். டி.ஜி.பி.,ராமநாதபுரம் எஸ்.பி.,கன்னியாகுமரி குளச்சல் மரைன் போலீசார், 'இச்சம்பவம் எங்கள் அதிகார எல்லையிலிருந்து வெகு தொலைவில் உள்ள 23 நாட்டிக்கல் மைல் துாரத்தில் நடந்தது.
மரைன் போலீசிலிருந்து கன்னியாகுமரி போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
விபத்து இழப்பீட்டிற்கு எங்களை பொறுப்பாக்க முடியாது. விபத்திற்கு காரணமான கப்பலை கண்டுபிடிப்பதற்கு இந்திய கடலோர காவல்படையினர்தான் (கிழக்கு மண்டலம்) பொறுப்பானவர்கள்,' என பதில் மனு தாக்கல் செய்துள்ளனர். சர்ச்சைக்குரிய பல கேள்விகள் உள்ளன. சரியான காரணம், ஆவணங்கள் இன்றி மனுதாரர் கோரும் நிவாரணத்தை உடனடியாக வழங்க முடியாது.
மும்பை கஞ்சூர் மார்க் (கிழக்கு) கப்பல் போக்குவரத்து இயக்குனர் ஜெனரல் 6 மாதங்களில் விசாரணையை முடித்து, அறிக்கையின் நகலை மனுதாரர் மற்றும் தமிழக அரசுக்கு வழங்க வேண்டும். மனுதாரர் சட்டத்திற்குட்பட்டு பரிகாரம் தேடலாம்.
விரும்பத்தகாத சம்பவங்களால் விபத்து, மரணம் அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட்டால், இழப்பீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
2021 ல் வழங்கிய ரூ.1 லட்சம் மிகக் குறைவாகத் தெரிகிறது. மனுதாரருக்கு மேலும் ரூ.1 லட்சத்தை ராமநாதபுரம் கலெக்டர் வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.