"அந்தமானில் துவங்கியது பருவமழை தென்மேற்கு பருவ மழை"- வானிலை மையம் தகவல்
"அந்தமானில் துவங்கியது பருவமழை தென்மேற்கு பருவ மழை"- வானிலை மையம் தகவல்
UPDATED : மே 19, 2024 12:40 PM
ADDED : மே 19, 2024 05:35 AM

சென்னை: தென்மேற்கு பருவ மழை, இன்று (மே 19) அந்தமான் மற்றும் மாலத்தீவு பகுதியில் துவங்கியது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குமரிக்கடல், அந்தமான் மற்றும் மாலத்தீவு பகுதியில் தென்மேற்கு பருவ மழை துவங்கியது. மே 31ம் தேதி கேரளாவில் தென் மேற்கு பருவமழை துவங்க சாதகமான சூழல் நிலவுகிறது. இந்த ஆண்டு 3 நாட்களுக்கு முன்கூட்டியே பருவமழை துவங்கி உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில், 22ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பெரும்பாலான மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தென்மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று முதல் 22ம் தேதி வரை, தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று (மே 19) தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதிகன மழை பெய்யும். கன்னியாகுமரி, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், துாத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (மே 20) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன முதல் அதிகன மழை பெய்யும். விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், துாத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலுார், அரியலுார், பெரம்பலுார், திருச்சி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும்.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், வரும் 22ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை, பொதுவாக இயல்பை விட குறைவாக இருக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு, ஒரு சில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வங்காள விரிகுடாவின் தென்மேற்கு பகுதியில், வரும் 22ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும். இது, வடகிழக்காக நகர்ந்து, 24ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
இன்று முதல் 22ம் தேதி வரை, குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய தென் மாவட்ட கடலோரப் பகுதிகள், கேரள, கர்நாடகா கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு - மாலத்தீவு பகுதிகளில், மணிக்கு 40 முதல் 45 கி.மீ., வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ., வேகத்திலும் காற்று வீசக்கூடும். நாளை முதல் 65 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

