ADDED : செப் 03, 2024 02:50 AM

மூணாறு: சின்னக்கானல் பகுதியில் உயிரிழந்த முறிவாலன் கொம்பன் உடலுக்கு மலைவாழ் மக்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.
மூணாறு அருகே சின்னக்கானல், சாந்தாம்பாறை ஆகிய ஊராட்சிகளில் அரிசி கொம்பன் காட்டு யானைக்கு பிறகு சக்கை கொம்பன் (பலாப்பழம் கொம்பன்) முறிவாலன் கொம்பன் (முறிந்த வால் கொம்பன்) ஆகிய காட்டு யானைகள் வலம் வந்தன. நேருக்கு, நேர் எதிர் கொண்டால் எதிரிகளை போன்று பலமாக மோதிக் கொள்ளும்.
அவை ஆக.,21ல் பலமாக மோதிக் கொண்டன. அதில் சக்கை கொம்பன் தந்தங்களால் குத்தியதில் முறிவாலன் கொம்பனின் பின்பகுதியில் 15 இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
அதனால் உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் நடமாடிய முறிவாலன் சின்னக்கானல் அறுபது ஏக்கர் பகுதியில் நடக்க இயலாமல் விழுந்து கிடந்தது. அதற்கு வனத்துறை கால்நடை டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி ஆக.,31 நள்ளிரவில் இறந்தது.
நேற்று வனத்துறை முதன்மை கால்நடை டாக்டர் அருண் சக்கரியா தலைமையில் டாக்டர்கள் சிபி, அருண்குமார், அனுராஜ் கொண்ட குழு பிரேத பரிசோதனை செய்தனர். அதில் 45 வயதுடைய முறிவாலன் கொம்பனை, சக்கை கொம்பன் தாக்கியதில் ஏற்பட்ட ஆழமான காயத்தில் கல்லீரலில் பலத்த காயம் ஏற்பட்டதுடன் விலா எலும்புகளும் முறிந்தன.
அதன் காரணமாக முறிவாலன் இறந்ததாக தெரியவந்தது. பின் மலைவாழ் மக்கள் முறிவாலன் கொம்பனின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். அதன்பிறகு அதே பகுதியில் உடல் புதைக்கப்பட்டது.