ADDED : ஆக 01, 2024 02:21 AM
சென்னை:மழைக் காலத்தில் மலை வாசஸ்தலங்களுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என, பொது மக்களுக்கும், சுற்றுலாப் பயணியருக்கும் அறிவுரைகள் வழங்கும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் காவிரி ஆற்றுப் படுகை மாவட்ட கலெக்டர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக, நேற்று தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்தினார்.
அப்போது, அவர் கூறியுள்ளதாவது:
நீலகிரி மாவட்டத்தில், நிலச்சரிவு ஏற்படாமல் இருக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மழைக் காலத்தில் மலை வாசஸ்தலங்களுக்கு வருவதை தவிர்க்கும்படி, பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணியருக்கு ஊடகங்கள் வழியாக அறிவுரை வழங்க வேண்டும்
நிலச்சரிவால் பாதிக்கப்படும் சாலைப் பகுதிகளை, நெடுஞ்சாலைத் துறையினர் கண்டறிந்து, உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்
நிலச்சரிவால் பாதிக்கப்படும் இடங்களில் வசிக்கும் மக்களுக்கு, பொதுவான எச்சரிக்கைகளை, எஸ்.எம்.எஸ்., வழியாக அனுப்ப வேண்டும்
மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடுவது குறித்து, பரவலாக விளம்பரப்படுத்த வேண்டும்
ஆறுகள் மற்றும் கால்வாய்களில், அதிக வெள்ளம் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் நீரில் இறங்குவதை தவிர்க்க வேண்டும். ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை பண்டிகையின்போது, பொது மக்கள் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே குளிக்க அனுமதிக்க வேண்டும்.
அத்தகைய இடங்களில், பொது மக்கள் கூட்டமாக தண்ணீரில் இறங்கி குளிப்பதை தவிர்க்க, போதுமான தடுப்புகள் ஏற்படுத்த வேண்டும்
மீட்பு பணிகள் செய்யவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், நீச்சல் வீரர்கள் மற்றும் மீனவர்களை நிலைநிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.