ADDED : மார் 12, 2025 08:37 PM
திருப்பூர்:நீதிபதிகளை பொதுவெளியில் அவமதிக்கும் கம்யூ., கட்சி, ஆளும் தி.மு.க., கூட்டணியில் இருக்கின்ற ஆணவத்தில் மத நல்லிணக்கத்தின் பெயரால் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க சதி செய்வதாக, ஹிந்து முன்னணி குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து, அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:
கடந்த, 9ம் தேதி மதுரையில் மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு கூட்டம் நடந்தது. அதில், பேசிய பலரும் மதக் கலவரத்தை துாண்டும் விதத்தில், சட்ட விரோதமாகவும் பேசியுள்ளனர். இக்கூட்டத்தில் மதுரை கம்யூ., - எம்.பி., வெங்கடேசன், திருப்பரங்குன்றம் மலை காக்கும் போராட்டத்துக்கு அனுமதி அளித்த நீதிபதியின் தீர்ப்புக்கு உள்நோக்கம் கற்பித்து, ஓய்வு பெற்ற பின், கவர்னர் பதவி கிடைக்கும் என்பதற்காக தீர்ப்பு வழங்கியுள்ளார் என அநாகரிகமாக பேசியுள்ளார். அது கண்டிக்கத்தக்கது.
இந்த பேச்சு மற்றும் அவரின் நடவடிக்கை மிகவும் கீழ்த்தரமான செயல். வெங்கடேசன் எம்.பி.,யாக இருப்பதால், அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு வரும் நிலையில், எம்.பி., மற்றும் அந்த கூட்டத்தில் பேசிய பலரின் கருத்துகள் நீதிபதிகளை, அதிகாரிகளை மிரட்டும் தொனியில் இருக்கிறது. இதனால், தமிழகத்தில், இந்த வழக்கு நடந்தால் அதிகாரிகள், நீதிபதிகள், வக்கீல்கள் சுதந்திரமாக செயல்பட முடியாது என சந்தேகிக்கிறோம்.
இத்தகைய சூழ்நிலையில் திருப்பரங்குன்றம் மலை மீதான உரிமை வழக்கை, வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும். மலை விஷயத்தை திட்டமிட்டு பிரச்னையாக உருவாக்கியது யார்? இந்த சதிக்கு பின்னணி என்ன என்பதை சி.பி.ஐ., அல்லது தேசிய புலனாய்வு முகமை மூலம் விசாரிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.