வீட்டு வரைபட கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்: அண்ணாமலை
வீட்டு வரைபட கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்: அண்ணாமலை
ADDED : ஆக 05, 2024 09:40 PM
சென்னை:'சுயசான்று அடிப்படையில், வீட்டு வரைபட அனுமதி வழங்குவதற்கான பகல் கொள்ளை கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகள், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் என, அனைத்து பகுதிகளிலும், இந்த சுயசான்று அடிப்படையிலான வீட்டு வரைபட அனுமதி கட்டணம் இரு மடங்குக்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. 'வீட்டு வரைபட அனுமதி வழங்குவதை எளிதாக்குவோம்' என்று வாக்குறுதி வழங்கிய தி.மு.க., சென்னையில், 1,000 சதுர அடி இடத்துக்கு அனுமதி வழங்க, 40,000 ரூபாயாக இருந்த கட்டணத்தை, 1 லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளது.
ஏற்கனவே, குறித்த நேரத்தில் காலதாமதமின்றி வரைபட அனுமதி பெற, பல தரப்பினருக்கும் கமிஷன் கொடுக்கும் நிலை இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில், சுயசான்று அடிப்படை என்று கூறி லஞ்ச ஊழலை அதிகாரப்பூர்வமாக்கி இருக்கிறது தி.மு.க., அரசு என்பதுதான் உண்மை.
பொது மக்கள் சுயசான்று அளித்து, வரைபட அனுமதி பெற, அதிக கட்டணம் செலுத்த வேண்டும் என்பது என்ன விதமான நடைமுறை? அதிக கட்டணம் செலுத்தினால், உடனே அனுமதி வழங்குவோம்; குறைந்த கட்டணம் செலுத்தினால், அனுமதி வழங்க தாமதமாக்குவோம் என்று கூறுகிறதோ தி.மு.க., அரசு.
பொது மக்கள் எதிர்பார்த்தது, சிக்கலற்ற நடைமுறை வாயிலாக தாமதமின்றி வரைபட அனுமதி வழங்குவதையே தவிர, இரு மடங்கு அதிக கட்டணத்தை அல்ல. உடனே சுயசான்று அடிப்படையில் வரைபட அனுமதி வழங்குவதற்கான பகல் கொள்ளை கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-பன்னீரும் எதிர்ப்பு
அ.தி.மு.க.,விலிருந்து வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை:
தி.மு.க., தேர்தல் அறிக்கையில், கட்டுமானப் பொருட்களான சிமென்ட், கம்பி, செங்கல், மணல், மரம் போன்ற பொருட்கள் நியாயமான விலையில் கிடைக்க வழிவகை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. ஏற்கனவே இருந்த வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டதால், பதிவுக் கட்டணம், பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
கட்டட அனுமதிக்கான கட்டணத்தை பன்மடங்கு தி.மு.க., அரசு உயர்த்தியுள்ளது. இதன்படி, அனைத்து விதமான கட்டட அனுமதிக்கான கட்டணங்களும், இரு மடங்கிற்கும் மேல் உயர்த்தப்பட்டுள்ளன. மக்களிடமிருந்து அநியாயமான முறையில், பல வழிகளில் தொடர்ந்து வரி வசூலிக்கப்படுகிறது. இது வழிப்பறிக் கொள்ளைக்கு சமம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.