தமிழகத்தில் எப்படி தொழில் நடத்துவது? மெகாவாட் ரூ.50 லட்சம் கட்டணமாம்!
தமிழகத்தில் எப்படி தொழில் நடத்துவது? மெகாவாட் ரூ.50 லட்சம் கட்டணமாம்!
ADDED : செப் 15, 2024 12:27 AM
சென்னை:தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள் தங்கள் சொந்த மின் பயன்பாட்டிற்கும், மின் வாரியத்திற்கு விற்கவும், காற்றாலை மின் நிலையங்கள் அமைக்கின்றன.
சில நிறுவனங்கள் தமிழகத்தில் காற்றாலை அமைத்து, மத்திய மின் தொடரமைப்பு நிறுவன துணைமின் நிலையங்களில் வழங்குகின்றன. இந்த மின்சாரம், பிற மாநிலங்களுக்கு எடுத்து செல்லப்படுகிறது.
இவ்வாறு அமைக்கப் படும் மின் நிலையத்திற்கு, தமிழக மின் வாரியத்திடம், 'லொக்கேஷன் கிளியரன்ஸ்' எனப்படும் இட அனுமதி பெற வேண்டும்.
இதன்படி, தமிழகத்தில் காற்றாலை அமைத்து, மத்திய வழித்தடத்தில் இணைக்க, மின் வாரியத்தின் துணை நிறுவனமான பசுமை எரிசக்தி கழகம், 'ரிசோர்ஸ் சார்ஜ்' என்ற பெயரில், 1 மெகா வாட்டிற்கு, 50 லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்க கடந்த ஆகஸ்டில் உத்தரவிட்டது.
இது, இட அனுமதி கேட்டு நிலுவையில் உள்ள விண்ணப்பத்துக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப் பட்டது.
இதற்கு, தொழில் துறையினரிடம் எதிர்ப்பு எழுந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி சில நிறுவனங்கள், 1,000 மெகாவாட் மின் நிலையம் அமைத்து, மத்திய வழித்தடங்களில் இணைக்க அனுமதி கேட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதற்கும் தலா 1 மெகா வாட்டிற்கு, 50 லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்க ஒப்புதல் கேட்டு, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், மின் வாரியம் மனு தாக்கல் செய்துள்ளது. இம்மனு மீதான விசாரணை, 19ம் தேதி நடக்கிறது.
இது குறித்து, முதலீட்டாளர்கள் கூறுகையில், 'தமிழகத்தில் நிலத்தின் விலை மிகவும் அதிகம். அப்படி இருந்தும் தனியாரிடம் நிலம் வாங்கி காற்றாலை அமைக்கப்படுகிறது. இட ஒப்புதல் தருவதை தவிர, மின் வாரியத்திற்கு வேறு எந்த பணியும் கிடையாது.
'இதற்கு எதற்கு, மெகா வாட்டிற்கு, 50 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். இப்படி செய்தால் எப்படி தொழில் நடத்த முடியும்?' என்கின்றனர்.
இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சில மாநிலங்களில் தான், காற்றாலை அமைக்க சாதகமான சூழல் உள்ளது.
'தமிழகத்தில் காற்றாலை அமைத்து, மத்திய வழித்தடத்தில் இணைக்கும் பட்சத்தில், தமிழக மின் உற்பத்தி திறனில் சேராது; எனவே தான், பிற மாநிலத்திற்காக தமிழகத்தில் காற்றாலை அமைக்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது' என்றார்.
தமிழகத்தில் இதுவரை, 1,800 மெகா வாட் திறனில் உள்ள காற்றாலை மின் நிலையங்கள், மத்திய வழித்தடத்தில் இணைக்கப்பட்டு உள்ளன. 1 மெகா வாட்டிற்கு, 50 லட்சம் ரூபாய் என்பது, வாரியத்தின் முறையான கட்டணம் மட்டும் தான்.