நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் முதல்வர் ஸ்டாலின் உருக்கம்
நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் முதல்வர் ஸ்டாலின் உருக்கம்
ADDED : ஆக 07, 2024 02:20 AM

சென்னை:''காலை உணவு திட்டத்தால், மாணவர்களின் பள்ளி வருகை உயர்ந்துள்ளது. இதைவிட மகிழ்ச்சியான செய்தி, வேறு எதுவும் இருக்க முடியாது. மகளிர் உரிமைத் தொகை வழியாக, பெண்களின் பொருளாதார சுதந்திரம் அதிகமாகி வருகிறது.
''நிதி வளத்தை பெருக்கும் ஆலோசனைகளை சொல்லுங்கள். காலதாமதமின்றி அனைத்து பயன்களும் மக்களை சென்றடைய, எளிதான நிர்வாக சீர்திருத்தங்களை சொல்லுங்கள்,'' என, மாநில திட்டக்குழுவுக்கு, முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
மாநில திட்டக் குழுவின் ஐந்தாவது கூட்டம், நேற்று தலைமைச் செயலகத்தில் நடந்தது.
அதில் முதல்வர் பேசியதாவது:
தமிழக அரசின் ஒவ்வொரு திட்டமும், எந்த அளவுக்கு மக்களுக்கு பயனுள்ள திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதை, தாங்கள் அளித்த அறிக்கை வழியே தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த அறிக்கை எங்களுக்கு தரப்படும் மார்க் ஷீட்.
உரிமைத் தொகை
அரசின் ஒவ்வொரு திட்டமும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் மேம்படுத்துவதாக அமைந்துள்ளது. காலை உணவு திட்டத்தால், மாணவர்களின் பள்ளி வருகை உயர்ந்துள்ளது. இதைவிட மகிழ்ச்சியான செய்தி, வேறு எதுவும் இருக்க முடியாது. மகளிர் உரிமைத் தொகை வழியாக, பெண்களின் பொருளாதார சுதந்திரம் அதிகமாகி வருகிறது.
இலவச பஸ் பயண திட்டம் காரணமாக, பெண்களின் சமூக பங்களிப்பு அதிகமாகி உள்ளது. புதுமை பெண் திட்டம் காரணமாக, கல்லுாரி செல்லும் மாணவியர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
பொருளாதாரம், கல்வி, சமூகம், சிந்தனை, செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒருசேர வளர வேண்டும். அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி. கடந்த மூன்று ஆண்டுகளாக எண்ணற்ற திட்டங்களை தீட்டினோம். இன்னும் புதிய திட்டங்கள் வர இருக்கின்றன.
மாநில திட்டக்குழு வழியாக புதிய சிந்தனைகளை, திட்ட வடிவங்களை எதிர்பார்க்கிறேன். கவனம் பெறாத துறைகளில் கவனம் செலுத்தி, புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும்.
கல்லுாரி மாணவர்களுக்கான இறுதித் தேர்வு வினாத்தாள்களை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை சொல்லி இருந்தீர்கள். அது செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்யுங்கள்.
ஆலோசனை
வேளாண்மை, காடுகள், வெப்பம் அதிகரிப்பு ஆகியவை குறித்த, உங்கள் ஆலோசனைகள், துறை சார்ந்த நிர்வாக நடவடிக்கைகளாக, எந்தளவு மாறி உள்ளன என்பதையும் ஆய்வு செய்யுங்கள். நிதி வளம் இருக்குமானால், இன்னும் பல திட்டங்களை, நம்மால் உருவாக்க முடியும். நிதி வளத்தை பெருக்கும் ஆலோசனைகளை சொல்லுங்கள்.
அறிவிக்கப்படும் திட்டங்கள், அனைத்து மனிதர்களையும் உடனடியாக சென்று சேர திட்டமிடுங்கள். காலதாமதமின்றி அனைத்து பயன்களையும் மக்கள் பெற்றாக வேண்டும். அதற்காக எளிதான நிர்வாக சீர்திருத்தங்களை சொல்லுங்கள்.
நம் ஆட்சியின் நோக்கங்களை, சாதனைகளை சொல்லும் வகையில், ஒரு கருத்தரங்கை, சென்னையில் நீங்கள் நடத்த வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
கூட்டத்தில், அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை செயலர் ரமேஷ்சந்த் மீனா, நிதித் துறை செயலர் உதயச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.