ADDED : ஆக 24, 2024 08:33 PM

சென்னை: அரசியல் பேச வேண்டுமானால் ஜாக்கிரதையாக பேச வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் கூறுவதை ஏற்றுக்கொள்வதாக கூறிய ஸ்டாலின் அனைத்திலும் நான் உஷாராக இருப்பேன் என பதில் அளித்துள்ளார்.
அமைச்சர் எ.வ.வேலு எழுதிய கலைஞர் எனும் தாய் புத்தக வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: அனைத்து துறைகளை சேர்ந்தவர்களையும் அரவணைத்து சென்றவர் கருணாநிதி. உயிரினும் மேலாக உடன்பிறப்புகளை மதித்தவர் கருணாநிதி. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகழை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லவேண்டும்.
கலைஞரின் தாய் தங்களை எப்படி பேணி வளர்த்தார் என்பதை எம்.ஜி.ஆர்.,சிவாஜி கூறுவர். பலருக்கும் தாய் போல செயலாற்றிய கருணாநிதியை தாய் என அழைப்பது சாலப்பொருத்தம். கண் அசைவை புரிந்து கொண்டு நிறைவேற்றுபவர் வேலு என கருணாநிதி கூறுவார். இப்போதும் எனக்கும் அது போலவே செயல்மிக்க அமைச்சராக செயல்பட்டு வருகிறார். என்ன வேலை கொடுத்தாலும் சிறப்பாக செயல்படுத்தி முடிப்பவர் எ,வ.வேலு கட்டுரை தொகுப்பின் கருத்துக்களே புத்தக தலைப்புகளாக உள்ளன. புத்தகத்தில் இடம்பெற்றுள்ள வரலாற்று சம்பவங்களை படித்த போது எனக்கு வியப்பாக இருந்தது.
கருணாநிதியின் வாழ்வில் நிகழ்ந்த முக்கிய அனுபவங்கள் இடம்பெற்ற சம்பவங்கள் அனைத்தும் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. என்னை விடவும் வயதில் மூத்தவரான ரஜினியின் அறிவுரையை ஏற்றுக்கொள்கிறேன். நடிகர் ரஜினிகாந்த் கவலைப்பட வேண்டாம். அனைத்திலும் நான் உஷாராக இருப்பேன் .இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
முன்னதாக விழாவில் கலந்து கொண்ட ரஜினி பேசும் போது அரசியல் பேச வேண்டுமானால் ஜாக்கிரதையாக பேச வேண்டும் என கூறி இருந்தார்.

