மணிப்பூரில் இருந்து காரில் வரும் போதைப்பொருளை வாடகை படகில் இலங்கைக்கு கடத்திய இப்ராஹிம்
மணிப்பூரில் இருந்து காரில் வரும் போதைப்பொருளை வாடகை படகில் இலங்கைக்கு கடத்திய இப்ராஹிம்
ADDED : ஜூலை 31, 2024 01:22 AM

சென்னை:ஜாபர் சாதிக்கை தொடர்ந்து, தி.மு.க., நிர்வாகியாக இருந்த மற்றொரு முக்கிய புள்ளியும், சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் ஹவாலா பணம் பரிமாற்றத்தில் ஈடுபட்டது அம்பலமாகி உள்ளது.
தி.மு.க.,வில், சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாபர் சாதிக், 35, சர்வதேச அளவில் போதை பொருட்கள் கடத்தி, 2,000 கோடி ரூபாய் வரை சம்பாதித்த வழக்கில் சிக்கினார். இவர் மீது சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.
கஞ்சா விற்பனை
அவரை தொடர்ந்து தற்போது, சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய புள்ளியாக, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த செய்யது இப்ராஹிம், 52, செயல்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
தி.மு.க.,வில் இவர், ராமநாதபுரம் மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு துணைத் தலைவராக இருந்துள்ளார்.
கூட்டாளிகள் பைசல் ரஹ்மான், 38; மன்சூர், 40 ஆகியோருடன் சேர்ந்து, சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து, பயணியர் போல, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு, 70 கோடி ரூபாய் மதிப்புள்ள மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருளை கடத்த முயன்றனர்.
மூவரையும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு சென்னை மண்டல இயக்குனர் அரவிந்தன் தலைமையிலான அதிகாரிகள் கைது செய்தனர்; 7 லட்சம் ரூபாய் ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர்.
செய்யது இப்ராஹிம் குறித்து, போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில், தொழில் வர்த்தகர் போல செய்யது இப்ராஹிம் செயல்பட்டுள்ளார். சொந்த ஊரில் கஞ்சா விற்பனை தொழிலிலும் ஈடுபட்டுள்ளார்.
ரகசிய கிடங்கு
இத்தொழிலை விரிவுபடுத்திய செய்யது இப்ராஹிம், மெத்தாம்பெட்டமைன் கடத்தி கோடிக்கணக்கில் சம்பாதிக்க துவங்கினார். படகுகளை வாடகைக்கு எடுத்து, இலங்கைக்கு மெத்தாம்பெட்டமைன் கடத்துவதையே முழுநேர தொழிலாக செய்து வந்துள்ளார்.
இவருக்கு, ராமநாதபுரம்மாவட்டத்தை சேர்ந்த பைசல் ரஹ்மான், சென்னையை சேர்ந்த மன்சூர் உதவியாக இருந்தனர். மணிப்பூர் மாநிலத்தில் இருந்து, கார் மற்றும் ரயில் வாயிலாக, சென்னைக்கு மெத்தாம்பெட்டமைன் போதை பொருளை கடத்தி வருவர்.
பின், செங்குன்றத்தில் ரகசிய கிடங்கு ஒன்றில் பதுக்கி வைத்து விடுவர். பயணியர் போல, கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு எடுத்துச் சென்று, படகு வாயிலாக இலங்கைக்கு கடத்தி விடுவர்.
போதை பொருள் கடத்தல் வாயிலாக கிடைத்த கோடிக்கணக்கான ரூபாயை சமமாக பங்கு போட்டுள்ளனர். செய்யது இப்ராஹிம், ஹவாலா பணம் பரிமாற்றம் செய்யும் முக்கிய புள்ளியாகவும் செயல்பட்டுள்ளார்.
இவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட, 7 லட்சம் ரூபாய், இலங்கையில் இருந்து அனுப்பப்பட்ட ஹவாலா பணம் என்பது தெரியவந்துள்ளது.
சொந்த ஊரில் உள்ள வீட்டை பூட்டி விட்டு, செய்யது இப்ராஹிம் மனைவி தலைமறைவாகி விட்டார். வீட்டில் சோதனை நடத்த உள்ளோம். ஜாபர் சாதிக் கூட்டாளியா செய்யது இப்ராஹிம் என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.