ADDED : மே 11, 2024 02:44 AM
சென்னை:நமது நாளிதழ் செய்தி எதிரொலியாக, குளிர்சாதன வசதி செய்யப்பட்ட வாகனங்களில், ஆவின் ஐஸ்கிரீம் சப்ளை துவங்கியுள்ளது.
ஆவின் தயாரிப்பு பொருட்களான பனீர், ஐஸ்கிரீம், குல்பி உள்ளிட்டவை, 'டிரை ஐஸ்' எனப்படும், திரவ நைட்ரஜன் வாயிலாக பதப்படுத்தி, வாகனங்களில் எடுத்து செல்லப்பட்டு வந்தது. அப்போது, அட்டை பெட்டியில் உள்ள ஓட்டை வழியாக, திரவ நைட்ஜரன், பொருட்களில் படுவதால், பாலகங்களுக்கு சப்ளை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
நேரடியாக திரவ நைட்ரஜன் பயன்பாடுள்ள பொருட்களை பயன்படுத்தக்கூடாது என, உணவு பாதுகாப்பு துறை எச்சரித்துள்ளது. இதனால், சப்ளை குறைக்கப்பட்டதால், ஆவினுக்கு நஷ்டம் ஏற்படும் நிலை உருவானது.
இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, குளிர்சாதன வசதி செய்யப்பட்ட வாகனங்களில், குல்பி, ஐஸ்கிரீம் சப்ளையை ஆவின் துவங்கியுள்ளது. அதேநேரம், ஒப்பந்த வாகனங்கள் எண்ணிக்கை குறைவால், அவற்றை சப்ளை செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. இப்பிரச்னையில், ஆவின் அதிகாரிகள் தலையிட்டு, தங்கு தடையின்றி பால் பொருட்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என, நுகர்வோர் எதிர்பார்க்கின்றனர்.