பக்கத்து வீட்டு தென்னை மரத்தால் அக்கப்போர் அகற்ற கோரிய வழக்கில் ஐகோர்ட் 'நோட்டீஸ்'
பக்கத்து வீட்டு தென்னை மரத்தால் அக்கப்போர் அகற்ற கோரிய வழக்கில் ஐகோர்ட் 'நோட்டீஸ்'
ADDED : மே 26, 2024 12:56 AM
மதுரை:தஞ்சாவூரில், பக்கத்து வீட்டு தென்னை மரத்தால் இடையூறு ஏற்படுவதாகவும், அகற்ற நடவடிக்கை கோரியும் தாக்கலான வழக்கில் ஆர்.டி.ஓ.,விற்கு 'நோட்டீஸ்' அனுப்ப உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
தஞ்சாவூர், தமிழ்நகர் சேகர், 78, என்பவர் தாக்கல் செய்த மனு: பக்கத்து வீட்டின் பின்புறம் தென்னை மரம் உள்ளது. அது வளைந்து எங்கள் வீட்டு வளாகத்திற்குள் அடிக்கடி தேங்காய்கள், கீற்றுகள், மட்டைகள் விழுகின்றன. கார் நிறுத்த கொட்டகை கூரையில் விழுவதால் சேதமடைகிறது. டூ - வீலர் சேதமடைந்தது.
இடையூறாக உள்ள மரத்தை அகற்றக்கோரி அவ்வீட்டின் உரிமையாளரிடம் தெரிவித்தேன்; அகற்றவில்லை. போலீசார் கூறியும் மரத்தை அகற்றவில்லை. தஞ்சாவூர் ஆர்.டி.ஓ.,விடம் புகார் அளித்தேன். அவர் தஞ்சாவூர் தாசில்தாரை ஆய்வு செய்ய உத்தரவிட்டார். அவர் ஆபத்து, இடையூறாக உள்ளதாக அறிக்கை அளித்தார்.
மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க, ஆர்.டி.ஓ., உத்தரவிட்டார். அதை எதிர்த்து பக்கத்து வீட்டுக்காரர் ஆர்.டி.ஓ.,விடம் மேல்முறையீடு செய்தார். இது சட்டப்படி ஏற்புடையதல்ல. ஆர்.டி.ஓ., எனக்கு நோட்டீஸ் அனுப்பினார்; பதில் அனுப்பினேன்.
ஆர்.டி.ஓ.,விற்கு பதிலாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தான் மேல்முறையீடு செய்ய வேண்டும். தென்னை மரத்தை அகற்ற ஏற்கனவே ஆர்.டி.ஓ., பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா விசாரித்து ஆர்.டி.ஓ., மற்றும் தாசில்தாருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை இரு வாரங்கள் ஒத்திவைத்தார்.