ஜெயகுமார் புகார் முடித்துவைப்பு: ஆணையத்திற்கு ஐகோர்ட் கேள்வி
ஜெயகுமார் புகார் முடித்துவைப்பு: ஆணையத்திற்கு ஐகோர்ட் கேள்வி
ADDED : ஏப் 02, 2024 01:50 AM

சென்னை: 'முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரின் புகார், போலீஸ் அறிக்கை அடிப்படையில் மட்டுமே ஏன் முடிக்கப்பட்டது' என, மாநில மனித உரிமை ஆணையத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
கடந்த 2022ல், உள்ளாட்சி தேர்தலின் போது, தி.மு.க., பிரமுகரை தாக்கியதாக பதிவான வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கைது செய்யப்பட்டார். கைதின் போது, மனித உரிமைகள் மீறப்பட்டதாக, மாநில மனித ஆணையத்தில் ஜெயகுமார் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதை விசாரித்த ஆணையம் புகாரை முடித்து வைத்து, கடந்த ஆண்டு ஜூலையில் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் ஜெயகுமார் மனுத்தாக்கல் செய்தார். புகார் குறித்து தன்னிடம் விசாரிக்காமலே, ஆணையம் அதை முடித்து வைத்ததாகவும், அந்த உத்தரவை ரத்து செய்து, உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார்.
மனு, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு, இரண்டு வாரங்களில் பதில் அளிக்க, மனித உரிமைகள் ஆணையம் மற்றும் போலீசாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஜெயகுமார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, ''பதில் மனுத்தாக்கல் செய்யவில்லை. போலீசாரின் அறிக்கையும் வழங்கப்படவில்லை,'' என்றார்.
இதையடுத்து, 'போலீஸ் அறிக்கை அடிப்படையில் மட்டுமே, ஜெயகுமார் மற்றும் ஜெயவர்த்தன் தரப்பில் அளித்த புகார்களை முடித்து வைத்தது ஏன்' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
'போலீஸ் அறிக்கை மீது விசாரணை நடத்தியிருக்க வேண்டும்; புகாரை முடிப்பதாக இருந்தால், அதற்கான காரணங்களை தெரிவித்திருக்க வேண்டும்' என்ற நீதிபதிகள், விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்தனர்.

