47 லட்சம் விவசாயிகளுக்கு அடையாள எண்: மத்திய அரசிடம் ரூ.500 கோடி எதிர்பார்ப்பு
47 லட்சம் விவசாயிகளுக்கு அடையாள எண்: மத்திய அரசிடம் ரூ.500 கோடி எதிர்பார்ப்பு
ADDED : மார் 03, 2025 06:32 AM

சென்னை : விவசாயிகளுக்கு தனி அடையாள எண் வழங்கும் பணியை மேற்கொள்ள, மத்திய அரசிடம் 500 கோடி ரூபாயை வேளாண் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
நாடு முழுதும் உள்ள விவசாயிகளுக்கு, ஆதார் போன்று தனி அடையாள எண் வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்படும் மானிய உதவிகள் பெற, இந்த அடையாள எண் கட்டாயம் என்ற நடைமுறையும் பின்பற்றப்பட உள்ளது.
அடையாள எண்ணை, அதற்கென உருவாக்கப்படும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன.
தமிழகத்தில், 47 லட்சம் விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்க, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இதற்காக விவசாயிகளின் பெயர், முகவரி, நிலத்தின் அளவு, பயன்பாடு உள்ளிட்ட விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இப்பணியில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இப்பணிக்கு, 500 கோடி ரூபாய் வழங்குவதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. எனவே, பணிகளை விரைந்து முடித்து, நிதியை பெறுவதற்கான முயற்சிகளை வேளாண் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து, வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் 47 லட்சம் விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்கப்பட உள்ளது. இதுவரை, 15 லட்சம் விவசாயிகளின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு, தனி எண் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த திட்ட இலக்கை படிப்படியாக அடையும் போது, அதற்கான நிதியை மத்திய அரசு விடுவிப்பது வழக்கம். அதன்படி, முதற்கட்டமாக, 67 கோடி ரூபாய் விரைவில் விடுவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.