'போதை புழக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லையெனில் சிறப்பு குழு போடுவோம்!' : உயர் நீதிமன்றம்
'போதை புழக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லையெனில் சிறப்பு குழு போடுவோம்!' : உயர் நீதிமன்றம்
ADDED : செப் 12, 2024 05:45 AM

சென்னை: 'தமிழகத்தில், போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த, திருப்திகரமான நடவடிக்கை இல்லை என்றால், சிறப்பு புலனாய்வுக்குழு வசம் ஒப்படைக்க, பரிசீலிக்க நேரிடும்' என, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
சென்னையில் குடிசைவாசிகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெண்ணுரிமை இயக்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், 'துரைப்பாக்கம், பெரும்பாக்கம் உள்ளிட்ட 4 இடங்களில் மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது. அங்கு, அடிப்படை வசதிகள் இல்லை' என, கூறப்பட்டது. மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், நான்கு இடங்களிலும் உள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, அட்வகேட் கமிஷனரை நியமித்தது.
அட்வகேட் கமிஷனர் ஆய்வு செய்து தாக்கல் செய்த அறிக்கையில், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள், இந்த பகுதிகளில் தாராளமாக கிடைப்பதாகக் கூறப்பட்டது.
இவ்வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய முதல் அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டபடி, போலீஸ் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும், அறிக்கை அளித்தார்.
இதையடுத்து, முதல் அமர்வு பிறப்பித்த உத்தரவு:
போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த, தற்போது நியமிக்கப்பட்டுள்ள போலீசாரின் எண்ணிக்கை போதுமானது அல்ல. தமிழகம் முழுதும் போதைப்பொருள் எளிதாகக் கிடைப்பதை, போலீஸ் அதிகாரிகளும், கூடுதல் அட்வகேட் ஜெனரலும் மறுக்கவில்லை.
போதிய எண்ணிக்கையில் போலீசார் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை அரசு ஏற்படுத்தி, தீவிர நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்றால், எந்த மாற்றமும் ஏற்படாது; இல்லையென்றால், உரிய உத்தரவை பிறப்பிக்க, இந்த நீதிமன்றம் தயங்காது.
இரண்டு வாரங்களில், அரசு தரப்பில் எடுத்த நடவடிக்கைக்கான அறிக்கையை தாக்கல் செய்வதாக, கூடுதல் அட்வகேட் ஜெனரல் தெரிவித்துள்ளார். திருப்திகரமான நடவடிக்கைகள் இல்லையென்றால், இந்தப் பிரச்னையை சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்க நேரிடும்.
அரசும், டி.ஜி.பி.,யும் உரிய மனுவை தாக்கல் செய்ய வேண்டும். செங்கல்பட்டு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவும், அறிக்கை அளிக்க வேண்டும்.
இவ்வாறு முதல் அமர்வு உத்தரவிட்டுள்ளது.