40 சதவீத கமிஷன் கேட்டால் எங்கிருந்து முதலீடுகள் வரும்? அண்ணாமலை கேள்வி
40 சதவீத கமிஷன் கேட்டால் எங்கிருந்து முதலீடுகள் வரும்? அண்ணாமலை கேள்வி
ADDED : ஏப் 14, 2024 02:15 AM

சென்னை :
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை:
ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளாக, கோவை இளைஞர்களின் வேலைவாய்ப்பு குறித்து கவலை இல்லாமல் இருந்தார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழக பா.ஜ., சார்பில் தேர்தல் வாக்குறுதிகளில், கோவையில், 'செமிகண்டக்டர்கள்' தயாரிப்பது குறித்து குறிப்பிட்டதற்குப் பின், கோவை குறித்து ஞாபகம் வந்திருக்கிறது.
தமிழகத்தில் தொழில் முதலீடு செய்ய வருபவர்களிடம், 40 சதவீத கமிஷன் வழங்க வேண்டும், முதல்வர் மருமகனை நள்ளிரவில் சந்திக்க வேண்டும்,
முதல்வரின் குடும்ப ஆடிட்டரை சந்திக்க வேண்டும் என்றெல்லாம் நிபந்தனைகள் விதித்தால், எந்த நிறுவனம் தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வரும்?
தங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கும் மாநிலங்களில் தான் முதலீடு செய்ய நிறுவனங்கள் முன்வரும்.
தங்கள் மீது முழு தவறையும் வைத்துக் கொண்டு, தேர்தல் நேரத்தில் மட்டும் இளைஞர்கள் மீது அக்கறை இருப்பது போல் நடிக்க வேண்டாம் ஸ்டாலின்.
கோவை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக இளைஞர்களுக்கும், தொழில்துறையில் தி.மு.க., செய்து வரும் துரோகங்களை, ஜூன், 4 தேர்தல் முடிவுகளுக்குப் பின், பா.ஜ., சரிசெய்யும். பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வரும் கோவையை மீட்டெடுப்பதே எங்கள் முக்கியப் பணி.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

