பறக்கும் டாக்சி தயாரிப்பில் சென்னை ஐ.ஐ.டி., மும்முரம்
பறக்கும் டாக்சி தயாரிப்பில் சென்னை ஐ.ஐ.டி., மும்முரம்
ADDED : மே 13, 2024 04:56 AM

சென்னை : சாலை போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் விதமாக, பறக்கும் டாக்சி தயாரிப்பில், சென்னை ஐ.ஐ.டி., ஈடுபட்டுள்ளது.
போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக, இந்தியா உட்பட உலக நாடுகள் பல, புதுபுது கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டு வருகின்றன.
புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடிப்பதில் முன்னோடியாக திகழும் சென்னை ஐ.ஐ.டி., நிறுவனம், தற்போது தனியார் நிறுவனத்துடன் இணைந்து, பறக்கும் டாக்சியை தயாரித்து வருகிறது. முழுதும் மின்சாரத்தில் இயங்கும் இந்த டாக்சி பயன்பாட்டுக்கு வந்தால், உலகின் முதல் பறக்கும் மின்சார டாக்சியாக இருக்கும்.
இது, 200 கி.மீ., வேகத்தில் செல்லும் திறன் உடையது. பறக்கும் டாக்சி தரையிறங்கவும், பறக்கவும், 15 அடி நீளமும், 15 அடி அகலமும் உடைய இடம் போதும். இந்த டாக்சியில், இரண்டு பேர் அமர்ந்து பயணிக்கலாம்.
இந்த டாக்சி பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில், 25 கி.மீ., துாரத்தை, 10 நிமிடத்தில் சென்றடையலாம்.
சென்னை ஐ.ஐ.டி.,யின் இந்த முயற்சிக்கு, மகேந்திரா நிறுவன தலைவர் ஆனந்த மகேந்திரா பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தன் டுவிட்டர் பக்கத்தில், 'சென்னை ஐ.ஐ.டி.,யில் துவங்கப்பட்டு உள்ள ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம், அடுத்த ஆண்டுக்குள் பறக்கும் எலக்ட்ரிக் டாக்சியை உருவாக்க உள்ளது.
'இந்தியா முழுதும் வேகமாக வளர்ந்து வரும் தொழில் முனைவோர் வளர்ப்பு மையங்கள் காரணமாக, புதுமை படைப்பாளிகள் இல்லாத நாடு இந்தியா என, யாராலும் கூற முடியாது' என, குறிப்பிட்டுள்ளார்.