ஏவுகணையை தாங்கும் 'கான்கிரீட் பேனல்' ஐ.ஐ.டி., உருவாக்கம்
ஏவுகணையை தாங்கும் 'கான்கிரீட் பேனல்' ஐ.ஐ.டி., உருவாக்கம்
ADDED : மார் 05, 2025 11:49 PM

சென்னை: ராணுவ பதுங்கு குழிகள், அணுசக்தி கட்டடங்கள், பாலங்கள், ஓடுபாதைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கட்டமைப்புகளில், ஏவுகணை தாக்குதலை தாங்கும் வகையிலான, 'கான்கிரீட் பேனல்'களை, சென்னை ஐ.ஐ.டி., உருவாக்கி உள்ளது.
நாட்டின் முக்கிய உள்கட்டமைப்பு பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில், ஏவுகணை அச்சுறுத்தலுக்கு எதிரான தொழில்நுட்பங்கள் அவசியமாகி உள்ளன.
அதற்காக, சென்னை ஐ.ஐ.டி., உதவி பேராசிரியர் அழகப்பன் பொன்னழகு, ஆராய்ச்சி அறிஞர் ரூப் உன் நபிதார் ஆகியோர், கான்கிரீட் பேனல்களை உருவாக்கி உள்ளனர். இவை, ஏவுகணை தாக்குதலையும் தாங்கி, பாதுகாப்பை உறுதி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதவி பேராசிரியர் அழகப்பன் பொன்னழகு கூறியதாவது:
முன்கூட்டியே கணிக்க முடியாத சூழலில், இதுபோன்ற நுட்பங்கள் அவசியமாகின்றன.
குறிப்பாக, ராணுவ பதுங்கு குழிகள், அணுசக்தி கட்டடங்கள், பாலங்கள், ஓடுபாதைகளில் வலுப்படுத்தப்பட்ட கான்கிரீட் பேனல்கள் பாதுகாப்பான கட்டமைப்பை உருவாக்கும்.
எங்களது பார்முலாவில், ராணுவ எல்லைகளில் பதுங்கு குழிகள் அமைப்பதற்கு மிக குறைந்த செலவு தான் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.