ADDED : மே 09, 2024 01:33 AM
சென்னை:''முன்னாள் மாணவர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், நன்கொடையாளர் வாயிலாக, சென்னை ஐ.ஐ.டி., 513 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது,'' என, அதன் இயக்குனர் காமகோடி தெரிவித்தார்.
சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் வி.காமகோடி, பேராசிரியர் மகேஷ் பஞ்சக்னுலா, சென்னை ஐ.ஐ.டி. 'இன்ஸ்டிடியூஷனல் அட்வான்ஸ்மென்ட்' பிரிவு சி.இ.ஓ., கவிராஜ் நாயர், ஐ.ஐ.டி., - 'கேம்ஸ்' நிறுவனர் வி.சங்கர் ஆகியோர் நேற்று நிருபர்களை சந்தித்தனர். அப்போது, இயக்குனர் வி.காமகோடி கூறியதாவது:
சென்னை ஐ.ஐ.டி., யானது, முன்னாள் மாணவர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், நன்கொடையாளர்கள் வாயிலாக, 513 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது. இது கடந்தாண்டைவிட 135 சதவீதம் அதிகம். இந்தாண்டு விளையாட்டு பிரிவை அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.
இந்த, 513 கோடியில் 368 கோடி ரூபாய் முன்னாள் மாணவர்களும், 95 கோடி ரூபாய் சி.எஸ்.ஆர்., கிராண்ட் வாயிலாகவும், மாணவர்களின் ஊக்கத்தொகைக்காகவும் பலர் நிதி வழங்கி உள்ளனர். அடுத்த வருடத்திற்கு, 717 கோடி ரூபாய்க்கான நிதியுதவி ஒப்பந்தங்களை ஈர்த்துள்ளோம்.
செயற்கை நுண்ணறிவு, மருத்துவம், விளையாட்டு, கலை என, பல துறைகளுக்கு நன்கொடைகள் வருவது முக்கியமாகும். அந்த வகையில், 1,072 பேர் நிதி வழங்கியுள்ளனர். அதில், 960 பேர் முன்னாள் மாணவர்கள், 112 பெருநிறுவன பங்குதாரர்கள். இந்த நன்கொடையாளர்களின் எண்ணிக்கை, வரும் நாட்களில் அதிகரிக்கும் என்று நம்புகிறோம்.
பி.டெக் ஏ.ஐ., என்ற புது பாடத்தை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளோம். இந்த பிரிவில் எண்ணற்ற வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இதற்கான பணிகளும் நடந்து வருகின்றன. 2047ல் நாடு வளர்ச்சியடைய வேண்டும் எனில் கண்டுபிடிப்புகள், வளர்ச்சிகள் அதிகரிக்க வேண்டும்.
மற்றவர்களுக்கு வேலை தரும் விதத்தில் அனைவரும் முன்னேற வேண்டும். 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களை ஊக்கப்படுத்த வேண்டும். இந்திய மருத்துவத்துடன் இணைந்து, சர்க்கரை நோய்க்கான ஆராய்ச்சி மையத்தை விரைவில் துவங்க இருக்கிறோம்.
பல நிறுவனங்களுடன் இணைந்து. ஐ.ஐ.டி., நிர்வாகம் சிறப்பாக செயல்படும் என்ற நோக்கில், முன்னாள் மாணவர்கள் பலர் நன்கொடை வழங்கி வருகின்றனர். ஐ.ஐ.டி.,யில் படித்த மாணவர்கள் 70 சதவீத பேர், ஒவ்வொரு ஆண்டும் பல முன்னணி நிறுவனங்களில் சேருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினர்.