ஆள்மாறாட்டம்: நேர்மையான அதிகாரி மறுவிசாரணை செய்ய ஐகோர்ட் உத்தரவு
ஆள்மாறாட்டம்: நேர்மையான அதிகாரி மறுவிசாரணை செய்ய ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஆக 03, 2024 11:20 PM
மதுரை:ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை நீதிமன்ற விசாரணையில் ஒரு வழக்கில் ஆள்மாறாட்டம் குறித்து மறு விசாரணை நடத்த எஸ்.பி.,க்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம், கீழவளவு வழக்கறிஞர் ஆதம் அலி தாக்கல் செய்த மனு:
ஒரு வழக்கு தொடர்பான ஆவணங்கள் கோரி மனு செய்ய திருவாடானை ஜெ.எம்., நீதிமன்றத்திற்கு 2022 டிச., 22ல் சென்றேன். மற்றொரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் ஆஜராகினர். அவர்களில் ஒருவர் வெளிநாட்டில் உள்ள நிலையில், அவருக்கு பதிலாக மற்றொருவர் ஆள்மாறாட்டத்தில் ஆஜரானார்.
நீதிமன்ற தலைமை எழுத்தர் திருவாடானை போலீசில் புகார் அளித்தார். ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட நபர் மீது மட்டும் வழக்கு பதியப்பட்டது. அதற்கு உடந்தையானவர்கள் மீது நடவடிக்கை இல்லை. சரியாக விசாரிக்கவில்லை. சி.பி.சி.ஐ.டி.,போலீசாரின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.
நீதிபதி பி.புகழேந்தி: திருவாடானை போலீசில் நிலுவையிலுள்ள இவ்வழக்கை ராமநாதபுரம் எஸ்.பி., வாபஸ் பெற வேண்டும். ஆள்மாறாட்டம் குறித்து மறு விசாரணை செய்ய நேர்மையான போலீஸ் அதிகாரியிடம் வழக்கை ஒப்படைக்க வேண்டும்.
அவர் உண்மையைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட ஜெ.எம்., நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஏற்கனவே தாக்கல் செய்த இறுதி அறிக்கையை திருவாடானை ஜெ.எம்., நீதிமன்றம் திருப்பி அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.