ஹிந்தியை திணித்தால் நடப்பதே வேறு: பிரசாரத்தில் கமல் திடீர் ஆவேசம்
ஹிந்தியை திணித்தால் நடப்பதே வேறு: பிரசாரத்தில் கமல் திடீர் ஆவேசம்
ADDED : மார் 31, 2024 11:07 AM

ஈரோடு: ஹிந்தி மொழி தெரிந்து கொள்ள வேண்டுமெனில் நாங்களே படித்துக்கொள்வோம். திணித்தால் நடப்பதே வேறு என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
ஈரோடு லோக்சபா தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பிரகாஷை ஆதரித்து, கமல்ஹாசன் பிரசாரத்தில் ஈடுபட்ட போது பேசியதாவது: விவசாயிகளின் போராட்டத்தை கலைக்க டிரோன் மூலம் கண்ணீர் புகை குண்டு வீசுகின்றனர். விஞ்ஞானத்தை விவசாயத்துக்கு பயன்படுத்தாமல், விவசாயிகளை விரட்ட பயன்படுத்தும் நிலை தற்போது உள்ளது. நான் சிறுவனாக இருந்த போது ஹிந்திக்கு எதிராக போராட்டம் நடந்தது.
அதில் வெற்றி பெற்றுவிட்டோம் என்று நினைத்தேன். ஆனால் இன்னும் தொடர்கிறது. எங்களுக்கென்று ஒரு மொழி உள்ளது. ஹிந்தி மொழி தெரிந்து கொள்ள வேண்டுமெனில் நாங்களே படித்துக்கொள்வோம். திணித்தால் நடப்பதே வேறு. பேரிடர் காலத்தில் தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை.
குழந்தைகளை படிக்க வைக்க காலை உணவுத் திட்டத்தை வழங்கும் அரசு தேவையா? அல்லது படிக்கும் குழந்தைகளை நுழைவுத் தேர்வு என்ற பெயரில் அவர்களின் கல்வியைப் பறிக்கும் அரசு தேவையா என்று மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

