சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி அதிகரிப்பு பருப்பு வகைகள், பூண்டு விலை திடீர் உயர்வு
சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி அதிகரிப்பு பருப்பு வகைகள், பூண்டு விலை திடீர் உயர்வு
UPDATED : ஏப் 24, 2024 12:07 PM
ADDED : ஏப் 23, 2024 11:55 PM

சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி அதிகரித்துள்ளதால், பருப்பு வகைகள், பூண்டு விலை மட்டுமே உயர்ந்துள்ளது. தேர்தல் நேரம் என்பதால், அனைத்து மளிகை பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளதாக, தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
மத்திய பிரதேசம், குஜராத், மஹாராஷ்டிரா, ஹரியானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கொண்டை கடலை உள்ளிட்ட பலவகை பருப்புகள் சாகுபடி செய்யப்படுகின்றன.
தமிழகத்தில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாசிப்பருப்பு சாகுபடி நடக்கிறது; ஆனால், உற்பத்தி போதுமான அளவில் இல்லை. எனவே, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் பருப்பு வகைகள் தேவையை, வடமாநிலங்கள்தான் பூர்த்தி செய்து வருகின்றன.
சிங்கப்பூர், மலேஷியா, துபாய், இலங்கை, வங்க தேசம், நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கும், அங்கிருந்துதான் பருப்பு வகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. மளிகை பொருட்களின் விலையை, 'ஆன்லைன்' வர்த்தகர்கள் தான், நிர்ணயம் செய்து வருகின்றனர்.
சீனாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கும் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்ட மளிகை பொருட்கள், அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. தற்போது, சீனாவின் ஏற்றுமதி தேவை அதிகரித்துள்ளது. ஆனால், சீனாவில் மட்டுமின்றி, அந்நாடு கொள்முதல் செய்யும் சிறிய நாடுகளிலும், உற்பத்தி குறைந்துள்ளது.
எனவே, சீனாவிற்கும், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கும், இந்தியாவில் இருந்து பருப்பு வகைகள், பூண்டு ஆகியவற்றின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இதனால், பருப்பு வகைகளின் விலை, மொத்த விலையில் கிலோவிற்கு, 20 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை, திடீரென உயர்ந்துள்ளது. சில்லரை விலையில், 40 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது.
பூண்டு மொத்த விலையில் கிலோவிற்கு 40 முதல் 45 ரூபாய் உயர்ந்துள்ளது. சில்லரை விலையில் 50 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இது நுகர்வோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரத்தில், லோக்சபா தேர்தல் நேரம் என்பதால், எண்ணெய் வகைகள், சிறுதானியங்கள் உள்ளிட்ட பலவகை மளிகை பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாக, சமூக வலைதளங்கள் வாயிலாக தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து, சென்னை கோயம்பேடு சந்தை மளிகை மொத்த வியாபாரி மகிழ்ச்சி அசோக் கூறியதாவது:
சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு இரண்டாம் தரம், மூன்றாம் தர பருப்பு வகைகளின் ஏற்றுமதி அதிகரித்து உள்ளது. இதனால், முதல் தர பருப்பு வகைகளின் தேவை அதிகரித்துள்ளதால், அவற்றின் விலை உயர்ந்துள்ளது.
இதேபோல பூண்டு விலையும் உயர்ந்துள்ளது. சமையல் எண்ணெய் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், உயர்த்தி விற்கப்படுவதாக தகவல் பரவுகிறது.
ஏற்றுமதியை குறைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதால், பருப்பு வகைகள், பூண்டு உள்ளிட்டவற்றின் விலை கணிசமாக குறையும் வாய்ப்புள்ளது. பாமாயில் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த மாதத்தில் லிட்டர் 175 ரூபாய்க்கு விற்ற தேங்காய் எண்ணெய், இப்போது 190 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நல்லெண்ணெய் விலை 320 ரூபாயிலிருந்து 300 ரூபாயாகவும், பாமாயில் விலை 100லிருந்து 95 ரூபாயாகவும் குறைந்துள்ளது. கடலை எண்ணெய் விலை மாற்றமின்றி, லிட்டர் 200 ரூபாயாகவும், ரிபைண்டு ஆயில் 110 ரூபாயாகவும் தொடர்கிறது. ரஷ்யா - உக்ரைன் போர் துவங்கியபோது, ரிபைண்டு ஆயில் லிட்டர் 220 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இப்போது பாதியாகக் குறைந்துள்ளது.
- இருதயராஜா,
எண்ணெய் வணிகர் சங்க தலைவர், கோவை
- நமது நிருபர் குழு -

