வெளிமாநில வரத்து அதிகரிப்பு: தமிழகத்தில் அரிசி விலை சரிவு
வெளிமாநில வரத்து அதிகரிப்பு: தமிழகத்தில் அரிசி விலை சரிவு
UPDATED : மார் 01, 2025 01:08 AM
ADDED : மார் 01, 2025 01:06 AM

வெளிமாநிலங்களில் இருந்து அரிசி வரத்து அதிகரிப்பால், விலை சரியத் துவங்கி உள்ளது.
தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில், நெல் முக்கிய பயிராக உள்ளது. இம்மாநிலங்களில், ஆண்டுக்கு சராசரியாக அரிசி உற்பத்தி, 120 முதல், 130 மில்லியன் டன்னாக இருக்கும். நடப்பாண்டில், 137 மில்லியன் டன் அரிசி உற்பத்தியாகி உள்ளது.
தமிழகத்தில் விளைச்சல் குறைந்த போதும், வெளி மாநிலங்களில் இருந்து வரத்து அதிகரிப்பால், அரிசி விலை சரியத் துவங்கி உள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வணிகர் சங்கங்களின் சம்மேளன மாநில இணை செயலர் வெங்கட்ராமன் கூறியதாவது:
தமிழகத்தில் நெல் அறுவடையானது, குறுவை, சம்பா என, இரண்டு போகங்களாக நடக்கிறது. சம்பா சாகுபடியில் தான் அதிக விளைச்சல் கிடைக்கும். சம்பா அறுவடையில், 75 சதவீத விளைச்சலும், குறுவை சாகுபடியில், 25 சதவீத விளைச்சலும் கிடைக்கும். நடப்பாண்டில் தமிழகத்தில், 70 லட்சம் டன் அரிசி உற்பத்தி இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், 91 லட்சம் டன் அரிசி தேவைப்படுகிறது.
இந்தாண்டு தமிழகத்தில் உற்பத்தி குறைந்த போதும், ஒடிசா, மேற்கு வங்கம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் அபரிமிதமான நெல் விளைச்சல் உள்ளது. தற்போது அங்கிருந்து புதிய அரிசி வரத்து தொடங்கி இருப்பதால் விலை குறைந்து வருகிறது.
கடந்தாண்டு ஜனவரியில், ஆந்திரா பொன்னி - புதியது கிலோ, 56 -- 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது, ஆந்திரா பொன்னி - புதியது 8 ரூபாய் விலை சரிந்து, 48 -- 52 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கர்நாடகா பொன்னி - ஜே.ஜி.எல்., கிலோ, 47 -- 52 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதுவும் நவம்பர் மாதத்தை விட, 6 ரூபாய் விலை குறைந்துள்ளது.
ஐ.ஆர்., 20 இட்லி அரிசி விலை கிலோ, 45 -- 48 ரூபாய் வரை, எந்த மாற்றமும் இன்றி விற்கப்படுகிறது. தமிழகத்தில், 80 சதவீதத்திற்கு மேல் பி.பி.டி., 5204 என்ற ஆந்திரா பொன்னி அரிசி வாங்குகின்றனர்.
தற்போது, புதிய ஆந்திரா பொன்னி அரிசி வாங்கி இருப்பு வைத்து பயன்படுத்தும் குடும்பங்களுக்கு, இந்த விலை குறைவு பயனுள்ளதாக அமையும். இந்தாண்டு விளைச்சல் குறைவாக இருந்தும், நெல் கொள்முதல் விலை குறைந்துள்ளதால், தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்
-- நமது நிருபர் - .