கருங்கல் ஜல்லி விலை உயர்வு கட்டுமான பணிகள் பாதிப்பு
கருங்கல் ஜல்லி விலை உயர்வு கட்டுமான பணிகள் பாதிப்பு
ADDED : ஏப் 05, 2024 02:37 AM

சென்னை: குவாரி
மற்றும் கிரஷர் உரிமையாளர்களின் விலை உயர்வு நடவடிக்கையால், கட்டுமான
பணிகளுக்கான கருங்கல் ஜல்லி கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தமிழகம்
முழுதும், 3,000த்துக்கும் மேற்பட்ட குவாரிகள் மற்றும் கிரஷர்கள்
செயல்படுகின்றன. தனியார் கட்டுப்பாட்டில், இந்த குவாரிகளும், கிரஷர்களும்
இருப்பதால், கருங்கல் ஜல்லிக்கான விற்பனை விலையை அரசு நிர்ணயிப்பது இல்லை.
இதனால், குவாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகளே விலை நிர்ணயித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு கருங்கல் குவாரிகளுக்கு, கனிம வளத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததால், போராட்டம் வெடித்தது.
அமைச்சர் துரைமுருகன் பேச்சு நடத்திய நிலையில், போராட்டம் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில்,
கருங்கல் ஜல்லி, எம்சாண்ட் விலையை, குவாரி உரிமையாளர்கள் யூனிட்டுக்கு,
1,500 ரூபாய் வரை உயர்த்தி உள்ளனர். இதற்கு கட்டுமான துறையினர் தரப்பில்
எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த எதிர்ப்பை சமாளிக்கும் வகையில்,
கட்டுமான பணிகளுக்கு கருங்கல் ஜல்லி அனுப்பும் அளவை குறைத்து, செயற்கையான
தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கத்தினர் கூறியதாவது:
கருங்கல்
ஜல்லி விலை உயர்வால், ஒரு கன அடிக்கு, 5 முதல் 10 ரூபாய் வரை கூடுதல்
செலவு ஏற்படுகிறது. இது தொடர்பாக, குவாரி உரிமையாளர்கள், தமிழக அரசு
அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து இருக்கிறோம். இருப்பினும், பெரிய கட்டுமான
திட்டங்களுக்கு கருங்கல் ஜல்லி வரத்தில் பாதிப்பு காணப்படுகிறது.
தேர்தல் சமயம் என்பதால், அரசு தலையிட முடியாது என்ற எண்ணத்தில், குவாரி உரிமையாளர்கள் ஆட்டம் போடுகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

