'ஆன்லைன்' மோசடிகள் வாயிலாக இந்தியர்கள் இழந்தது ரூ.25,000 கோடி
'ஆன்லைன்' மோசடிகள் வாயிலாக இந்தியர்கள் இழந்தது ரூ.25,000 கோடி
ADDED : ஜூன் 18, 2024 06:28 AM

புதுடில்லி : மொபைல் போன் அழைப்புகள், சமூக ஊடகங்கள் வாயிலாக அப்பாவி மக்களுக்கு பணத்தாசை காட்டி ஏமாற்றும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இதுபோன்ற, 'சைபர்' குற்றங்களில் குற்றவாளிகளை கண்டுபிடித்து, இழந்த பணத்தை மீட்பது என்பது பெரும் சவாலாகவே உள்ளது. இந்நிலையில், ஆன்லைன் மோசடிகள் குறித்த மத்திய அரசின் உயர்மட்ட கூட்டம் டில்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஆன்லைன் மோசடிகள் குறித்து கூட்டத்தில் பல்வேறு அம்சங்களும் விவாதிக்கப்பட்டன. அதன் விபரம்:
இந்தாண்டு ஜனவரி துவங்கி ஜூன் வரையிலான காலகட்டம் வரை, சைபர் மோசடி குறித்து 709 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. புகார் அளித்த ஒவ்வொருவரும் குறைந்தது 1 கோடி ரூபாய்க்கு மேல் இழந்துள்ளனர். இழப்பின் மொத்த மதிப்பு 1,421 கோடி ரூபாய்.
கடந்த 2020 முதல் 2024, பிப்., வரை தேசிய சைபர் குற்ற இணையதளத்தில் 31 லட்சம் புகார்கள்பதிவு செய்யப்பட்டுள்ளன.இதில் மிகவும் குறைந்த அளவிலான கைதுகள் நடந்திருப்பது கவலை அளிக்கிறது. பதிவான வழக்குகளில், 1 சதவீதம் கூட கைதுகள் நடக்காதது மிகப் பெரிய குறையாக பார்க்கப்படுகிறது.
சைபர் குற்றங்கள் தொடர்பாக பல்வேறு விசாரணை அமைப்புகளும் 66,000க்கும் மேற்பட்ட வழக்குகளை இதுவரை பதிவு செய்துள்ளன. இதில்,500 கைது நடவடிக்கைகள் மட்டுமே இந்தாண்டு வரை எடுக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான சைபர் குற்றங்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக நடப்பதால், அந்நிறுவனங்களின் ஒத்துழைப்பை மத்திய அரசு நாடியுள்ளது. மோசடி கடன் செயலிகள், பொன்ஸி திட்டங்கள், மோசடி பங்கு சந்தை முதலீட்டு திட்டங்களை முன்கூட்டியே கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில், சைபர் குற்றங்கள் வாயிலாக அப்பாவி மக்கள் 25,000 கோடி ரூபாய் பணத்தை இழந்துள்ளனர். இது, சில மாநிலங்களின் ஆண்டு பட்ஜெட்டை விட அதிகம். இவ்வாறு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.