காவல்துறை செயலியில் ஊடுருவல்: வெளி மாநில ஆசாமிகளுக்கு வலை
காவல்துறை செயலியில் ஊடுருவல்: வெளி மாநில ஆசாமிகளுக்கு வலை
ADDED : மே 07, 2024 04:55 AM

சென்னை: தமிழக காவல் துறையில், 'சிசிடிஎன்ஸ்' எனப்படும், குற்றம் மற்றும் குற்ற வலைப்பின்னல் என்ற இணையதளம் வாயிலாக, முக அடையாள மென்பொருள் செயலி இயக்கப்படுகிறது.
இதில், குற்ற வழக்கில் சிக்கிய நபர்கள், தேடப்படும் குற்றவாளிகள், காணாமல் போனவர்கள், அடையாளம் தெரியாத இறந்தவர்களின் உடல்களின் படங்கள் இடம் பெற்றுள்ளன.
எப்.ஆர்.எஸ்., எனப்படும் இந்த செயலியை, 14,112 போலீசார் பயன்படுத்தி வருகின்றனர். மொபைல் போனில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள இந்த செயலியில், சந்தேக நபர்களை படம் பிடித்தால் போதும், அப்போதே, அவர் யார், வீட்டு முகவரி, வயது, குற்ற வழக்குகள் உள்ளனவா என்பது உள்ளிட்ட விபரங்கள் தெரிந்து விடும்.
இந்த செயலி, கோல்கட்டாவில் 'சிடிஏசி' என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. சமீபத்தில், மர்ம நபர்கள் இந்த செயலியில் ஊடுருவி தரவுகளை திருடி உள்ளனர். இதுகுறித்து, செயலியை உருவாக்கிய, 'சிடிஏசி மற்றும் எல்காட்' நிறுவனங்களும் விசாரித்து வருகின்றன.
மேலும், தகவல்கள் திருடப்படாமல் இருக்க, 'அட்மின் அக்கவுண்ட்' நீட்டிக்கப்பட்டுள்ளது. காவல்துறை செயலியில் ஊடுருவி தகவல்கள் திருடப்பட்டது தொடர்பாக, சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், எப்.ஆர்.எஸ்., செயலியில், சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபடும் வெளி மாநில ஆசாமிகள், அட்மின் அக்கவுண்டில் இருந்து பாஸ்வேர்டை திருடி உள்ளனர். FalconFeeds.io என்ற முகவரியில் உள்ள, 'ஐடி'யில் இருந்து, எப்.ஆர்.எஸ்., செயலிக்குள் ஊடுருவல் நடந்து இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் விரைந்து குற்றவாளிகளை கைது செய்ய, சைபர் கிரைம் குற்றங்களை துப்பு துலக்குவதில் திறமையான போலீசார் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.