ADDED : செப் 03, 2024 12:51 AM

சென்னை: மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள விவசாயிகளிடம் இருந்து, தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் செய்கிறது.
நடப்பு நெல் கொள்முதல் சீசன் இம்மாதம், 1ம் தேதி துவங்கியது. அன்று, ஞாயிற்று கிழமை என்பதால், நேற்று முதல் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யும் பணி துவங்கியது.
இதற்காக, வாணிப கழகம் சார்பில், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட நெல் விளைச்சல் அதிகம் உள்ள இடங்களில், நேரடி கொள்முதல் நிலையங்கள் துவக்கப்பட்டன.
தேவைப்படும் இடங்களில் மாவட்ட கலெக்டர் அனுமதியுடன், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை துவக்குமாறும்; நெல் மூட்டைகளை உடனுக்குடன் கிடங்குகள் மற்றும் அரிசி ஆலைகளுக்கு அனுப்புமாறும், மண்டல மேலாளர்களை, வாணிப கழகம் அறிவுறுத்தியுள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் சார்பில், விவசாயிகளுக்கு, 100 கிலோ எடை உடைய குவின்டால் சாதாரண நெல்லுக்கு, 2,405 ரூபாயும்; சன்னரக நெல்லுக்கு, 2,450 ரூபாயும் குறைந்தபட்ச ஆதரவு விலையாக வழங்கப்படுகிறது.
பா.ம.க., தலைவர் அன்புமணியின் அறிக்கை:
தமிழகத்தில் 2023- - 24ல், 34.96 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது, 2022- - 23ல் கொள்முதல் செய்யப்பட்ட 44.22 லட்சம் டன்னை விட, 9.26 லட்சம் டன், அதாவது 21 சதவீதம் குறைவு. தமிழகத்தில் நேரடி நெல் கொள்முதல் அளவு, சில ஆண்டுகளாக தொடர்ந்து குறைந்து வருவது கவலை அளிக்கிறது.
அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம், காத்திருக்க வைத்தல், சரியான நேரத்தில் கொள்முதல் விலையை வழங்காதது ஆகியவற்றால், நெல் கொள்முதல் குறைந்துள்ளது. இவற்றை சரி செய்யாமல், நெல் கொள்முதல் அளவை அதிகரிக்க முடியாது.
அரிசி உற்பத்தியில், தமிழகம் இன்னும் தன்னிறைவு பெறவில்லை. தமிழகத்தில் ஆண்டுக்கு 91 லட்சம் டன் அரிசி தேவைப்படும் நிலையில், 72 லட்சம் டன் அரிசி மட்டும் தான் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதை மாற்றி, தமிழகத்தில் அரிசி சாகுபடி பரப்பையும், உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.