ADDED : மார் 12, 2025 01:25 AM

திருச்சி: நாகையில் இருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த கஞ்சா பிடிபட்ட வழக்கை முறையாக விசாரிக்காமல், குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்த இன்ஸ்பெக்டரை டிஸ்மிஸ் செய்து, திருச்சி டி.ஐ.ஜி., உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம், கானக்கிளியநல்லுார் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் பெரியசாமி, 56. இவர், இதற்கு முன் நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றினார்.
கடந்த 2022ல் நாகை டவுன் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பெரியசாமி பணியாற்றியபோது, அங்கிருந்து இலங்கைக்கு கடல்வழியாக கடத்தவிருந்த, 400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை பெரியசாமி முறையாக விசாரிக்கவில்லை. கஞ்சா வழக்கு குறித்து போதை பொருள் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை, வழக்கின் குற்றவாளிகளுடன் விடுதியில் விருந்தில் பங்கேற்றுள்ளார்.
குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என, அடுத்தடுத்த குற்றச்சாட்டு எழுந்தது.
இவர், பணியில் பல்வேறு குற்றச்சாட்டில் சிக்கி 13 முறை தண்டிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து பிரச்னையில் சிக்கி வரும் இவரை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து, திருச்சி டி.ஐ.ஜி., வருண்குமார் நேற்று உத்தரவிட்டுள்ளார்.