இறந்த பசுவின் உரிமையாளருக்கு ரூ.65,000 வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவு
இறந்த பசுவின் உரிமையாளருக்கு ரூ.65,000 வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவு
ADDED : ஆக 05, 2024 01:40 AM
சென்னை:நோய் பாதிப்பால் இறந்த பசுவின் உரிமையாளருக்கு, 50,000 ரூபாய் காப்பீட்டு தொகையுடன், சேவை குறைபாடு, வழக்கு செலவு மற்றும் அவரின் மன உளைச்சலுக்காக 15,000 ரூபாயையும் வழங்க, சேலம் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம், பொட்டனேரியைச் சேர்ந்த தங்கவேல் தாக்கல் செய்த மனு:
அரசின் கால்நடை காப்பீட்டு திட்டத்தின் கீழ், நானும், என் மகனும், தலா ஐந்து பசு மாடுகளை காப்பீடு செய்திருந்தோம். 2022 டிசம்பர் 29 முதல், 2023 டிசம்பர் 28 வரை காப்பீடு காலம். நோயால், 2023 ஏப்ரல் 6ல் பசு மாடு ஒன்று உயிரிழந்தது.
உடனே, பொட்டனேரி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலருக்கு தகவல் அளித்தேன். மறுநாள், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரி முன், ஆவின் கால்நடை டாக்டரால், உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மாடு புதைக்கப்பட்டது.
கிடைக்கவில்லை
காப்பீடு தொகை விரைவில் கிடைக்கும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். நேரடியாகவும், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் வாயிலாகவும், பல முறை முயன்றும் காப்பீடு தொகை கிடைக்கவில்லை.
காப்பீடு கோரிய விண்ணப்பத்தை நிராகரித்து, 2023 ஜூலை 13ல், காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து, பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்துக்கு கடிதம் வந்தது.
எனவே, மாட்டின் இறுதிச் சடங்கு செலவு 10,000 ரூபாய்; காப்பீடு கோரி அலைந்த செலவு 1,000 ரூபாய்; மன உளைச்சலுக்கு 5,000 ரூபாயுடன், 50,000 ரூபாய் காப்பீடு தொகையும் வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு, சேலம் நுகர்வோர் நீதிமன்ற தலைவர் கணேஷ்ராம், உறுப்பினர் ரவி முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்தரப்பில் வழக்கறிஞர் எம்.நந்தகுமார் ஆஜரானார்.
இருதரப்பு வாதங்களுக்கு பின் பிறப்பித்த உத்தரவு:
ஒரே குடும்பத்தில் மனுதாரரும், அவரது மகனும், 10 மாடுகளுக்கு காப்பீடு செய்துள்ளனர். ஒரே திட்டத்தில், 10 மாடுகளை காப்பீடு செய்துள்ளதால், மனுதாரருக்கு காப்பீடு தொகை மறுக்கப்படுகிறது என்று பதில் அளித்து உள்ளனர்.
இது, காப்பீடு நிறுவன அதிகாரிகளுக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், மாடுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி எண்கள் வழங்கியுள்ளனர். மனுதாரர், அவரது மகன் இருவரின் வீட்டு முகவரியும் ஒன்று.
சேவை குறைபாடு
இது குறித்து, அதிகாரிகளுக்கு நன்றாக தெரிந்துள்ளது. இருப்பினும், காப்பீடு தொகையை வழங்காமல் சேவை குறைபாடு புரிந்துள்ளனர் என்பது தெரிகிறது.
எனவே, 50,000 ரூபாய் காப்பீடு தொகை; சேவை குறைபாடுக்கு 8,000 ரூபாய்; மன உளைச்சலுக்கு 4,000 ரூபாய், வழக்கு செலவுக்கு 3,000 ரூபாயை, இரண்டு மாதத்துக்குள் காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும். இல்லையெனில், 9 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.