அன்பில் செப்பேட்டை தேடும் பணி தீவிரம் தகவல் தருவோருக்கு சன்மானம் அறிவிப்பு
அன்பில் செப்பேட்டை தேடும் பணி தீவிரம் தகவல் தருவோருக்கு சன்மானம் அறிவிப்பு
ADDED : மே 30, 2024 01:45 AM

சென்னை:'ராஜராஜசோழனின் தந்தை சுந்தரச்சோழன் வழங்கிய, அன்பில் செப்பேடு குறித்து தகவல் தெரிவிப்போருக்கு, தக்க சன்மானம் வழங்கப்படும்' என, மாநில சிலை திருட்டு தடுப்பு பிரிவு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அன்பில் என்ற ஊரில், 1,200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் அனிருத்த பிரம்மராயர்; வைணவ பக்தர். அவரின் தாத்தா அனிருத்தரும், தந்தை நாராயணனும், ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு அமுது படைத்தவர்கள்.
அந்த வழியில், அனிருத்த பிரம்மராயரும் அமுது படைத்தார். வறுமையில் உள்ளோருக்கு தானியங்களை தானமாக வழங்கினார். அவர், ராஜராஜசோழனின் தந்தையான சுந்தரச்சோழனிடம் அமைச்சராக இருந்தார்.
அனிருத்த பிரம்மராயரின் நிர்வாக திறமைக்கு அங்கீகாரமாக, சுந்தரச்சோழன் அவருக்கு, 'பிரமாதிராசன்' என்ற பட்டத்தையும், மயிலாடுதுறை அருகே கருணாகரமங்கலம் என்ற பெயரில், 10 வேலி நிலத்தையும் தானமாக வழங்கினார்.
அதை மாதவபட்டன் வாயிலாக, 11 செப்பேடுகளில் எழுதி ஒப்படைத்தார். இதற்கு அன்பில் செப்பேடு என்று பெயர்.
தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் உள்ள இந்த செப்பேடு, சோழர்களின் மிக முக்கிய ஆவணம். நம் கலாசாரம், பண்பாடு, பாரம்பரியத்தை உலகிற்கு எடுத்துச் சொல்லும் பொக்கிஷம் என, வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அன்பில் சத்திய வாஹீஸ்வரர் கோவிலில் இருந்த இந்த செப்பேடை, 1957ல், கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து வந்த தொல்லியல் துறை குழுவினர் பார்வையிட்டு சென்றுள்ளனர். படம் எடுத்தும் சென்றுள்ளனர். தற்போது, அந்த கோவிலில் செப்பேடு இல்லை; எங்கு உள்ளது என்ற தகவலும் இல்லை.
இதுகுறித்து, மாநில சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். செப்பேடு குறித்து, எஸ்.பி., சிவகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 'செப்பேடு குறித்து தகவல் தெரிந்தோர் மற்றும் அதை வைத்திருப்போர், எங்களை அணுகினால், தக்க சன்மானம் அளிக்கப்படும்' என, அறிவித்துள்ளனர்.
எஸ்.பி.,யின், 98421 26150 என்ற மொபைல் போன் எண்ணுக்கும், இன்ஸ்பெக்டரின், 94981 56669 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.