மிரட்டல், மன்னிப்பு; அநாகரிகத்தின் உச்சம்: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கண்டனம்
மிரட்டல், மன்னிப்பு; அநாகரிகத்தின் உச்சம்: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கண்டனம்
ADDED : செப் 15, 2024 12:49 AM

கோவை: ''அதிகாரத்தில் இருப்பவர்கள், அதிகார தோரணையில் மிரட்டுவதும், மன்னிப்பு கேட்க வைப்பதும் அதை பொது வெளியில் வெளியிடுவதும் கண்டிக்கத்தக்கது,'' என, செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்., தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி:
கோவையில் நடந்த ஜி.எஸ்.டி., குறைதீர்க்கும் நாளில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர், கேள்வி கேட்டதற்காக தன்னுடைய அறைக்கு அழைத்து, அவரை மன்னிப்பு கேட்க வைத்ததும் கண்டிக்கத்தக்கது. கோவை, பண்புள்ள மண், இங்கு ஒரு அநாகரிக செயல் நடந்திருப்பதை கண்டிக்கிறோம்.
கோவையில் நடந்த நிகழ்வுக்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்பதில் என்ன பயன்? பெண்களை நாம் தாயாக பார்க்கிறவர்கள், ஒரு ஆம்பளையை வரவழைத்து,மன்னிப்பு கேட்க வைத்து, படம் எடுத்து போடுவார்களா, நம் சகோதரிகள் செய்வார்களா? அநாகரிகத்தின் உச்சம் இது. அவர்கள் தான் மன்னிப்பு கேட்க வேண்டும்.
முதல்வர் ஸ்டாலின் இதுவரை 8000 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து வந்துள்ளார். அவருக்கு பாராட்டுக்கள். ஒரு டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி தமிழ்நாடு வளர்ந்து கொண்டிருக்கிறது.
தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் வலுவாக உள்ளது. பிற கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளன. இந்த கூட்டணி ஒரு மகா சமுத்திரம், அவ்வப்போது அலை அடிக்கும், ஆனால் அமைதியாகிவிடும்.
அசைக்க முடியாத இரும்பு கோட்டை போன்ற வலிமையான கூட்டணி; அசைக்க முடியாது; இந்த கூட்டணி தொடரும்.
இவ்வாறு, கோவையில் செல்வப் பெருந்தகை கூறினார்.