ADDED : செப் 11, 2024 02:02 AM
சென்னை:வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள வசதியாக, மணல் மூட்டைகள், சணல், சவுக்கு கம்புகளை தயார் செய்யும்படி, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலுார் மாவட்டங்கள், வடகிழக்கு பருவமழையால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. அமைச்சர் துரைமுருகன், இம்மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வெள்ளத் தடுப்பு பணிகள் குறித்து, துறை செயலர் மணிவாசன், முதன்மை தலைமை பொறியாளர் மன்மதன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
அப்போது, அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது: சென்னை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள, 38.5 கோடி ரூபாய்க்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வீராங்கல் ஓடை, ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம் - அரும்பாக்கம் கால்வாய், பகிங்ஹாம் கால்வாய், வேளச்சேரி ஏரி கால்வாய், கூவம், அடையாறு ஆற்றில் ஆகியவற்றில் துார்வாரும் பணிகள் நடக்கின்றன.
அவற்றில் மிதக்கும் தாவரங்கள் மற்றும் கழிவுகள், இயந்திரங்கள் வாயிலாக அகற்றப்பட்டு வருகின்றன. தணிகாசலம் கால்வாய், மணப்பாக்கம் கால்வாய், ரெட்டேரி, கெருகம்பாக்கம் கால்வாய் சீரமைப்பு பணிகளையும், செப்., 30ம்தேதிக்குள் முடிக்க வேண்டும். தேவையான மணல் மூட்டைகள், காலி கோணிகள், சவுக்கு கம்புகள் ஆகியவற்றை, பருவமழையை எதிர்கொள்வதற்கு வசதியாக ஆங்காங்கே போதுமான அளவில் இருப்பு வைக்கவேண்டும்.
இவ்வாறு துரைமுருகன் கூறியுள்ளார்.
தனக்கு தண்ணீர் ராசி இருப்பதாகவும், அமைச்சராக இருக்கும் போதெல்லாம் நன்றாக மழை பெய்யும் என்றும், சட்டசபை உட்பட பல்வேறு இடங்களில் அமைச்சர் துரைமுருகன் பேசி வருகிறார். அதற்கேற்ப, கனமழையை எதிர்பார்த்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.