மழையால் பால் உற்பத்தி அதிகரித்தது பெருமையா? அமைச்சருக்கு கேள்வி
மழையால் பால் உற்பத்தி அதிகரித்தது பெருமையா? அமைச்சருக்கு கேள்வி
ADDED : மே 30, 2024 01:33 AM
சென்னை:'கோடையில் பெய்த மழையால், பால் உற்பத்தி பெருகியிருப்பதில் பெருமைப்பட என்ன இருக்கிறது' என, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜுக்கு, தமிழக பால் விற்பனை முகவர்கள், தொழிலாளர் நலச்சங்கத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அச்சங்கம் வெளியிட்ட அறிக்கை:
'முதல்வரின் வழிகாட்டுதலின்படி, கடும் வறட்சியிலும், 31 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது; கடுமையான நிர்வாக மற்றும் சிக்கன நடவடிக்கைகள் வாயிலாக, ஆவின் நிலையான வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது' என, அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
பால்வளத் துறையையும், ஆவினையும் கவனிக்கத் தவறி, முழுநேர பா.ஜ., எதிர்ப்பு அரசியலை, அமைச்சர் கையில் எடுத்திருந்தார்.
நீண்ட இடைவெளிக்குப் பின், ஆவின் குறித்து, அவர் சிந்தித்து இருப்பது மகிழ்ச்சி. ஆனாலும், அதிகாரிகள் தரும் தவறான புள்ளி விபரங்களை வைத்து, பால் கொள்முதல் அதிகரித்துள்ளதாகக் கூறுவது, நகைச்சுவையாக உள்ளது.
ஏப்ரல், மே மாதங்களில், தமிழகத்தில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதாக, எந்த மாவட்டத்தில் இருந்தும் செய்தி வரவில்லை. அரசு தரப்பில் அறிக்கையும் இல்லை.
கடுமையான வறட்சி ஏற்பட்டு இருந்தால், விவசாயிகளுக்கும், கால்நடை வளர்ப்பவர்களுக்கும், அரசு வறட்சி நிவாரணம் வழங்கி இருக்க வேண்டும். வறட்சி ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கனவு கண்டிருக்கிறார்.
கோடைக் காலத்தில் பல்வேறு மாவட்டங்களில் வழக்கத்தைவிட கூடுதலாக மழை பெய்துஉள்ளது.
மழைக்காலங்களில், பால் உற்பத்தி கணிசமாக உயரும் என்பது, பாமர மக்களுக்கும் நன்றாக தெரியும். கோடை மழையால் பால் உற்பத்தி பெருகியிருப்பதில் பெருமைப்பட என்ன இருக்கிறது.
இது, பால் பண்ணைகளில் நடக்கும் பால் திருட்டு சம்பவங்கள், பால் கலப்பட சம்பவங்கள், அமுல் நிறுவனத்தின் பால் கொள்முதல் செய்தியை மடைமாற்றும் செயலாகவே தெரிகிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர்.