ADDED : செப் 10, 2024 05:28 AM

சென்னை: டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை குறைந்து வருவதற்கு, போதை பொருட்கள் விற்பனை அதிகரிப்பு காரணமா என்ற சந்தேகம் எழுந்துஉள்ளது.
டாஸ்மாக் கடைகளில் தினமும் சராசரியாக, 150 கோடி ரூபாய் மதிப்பிலான, 60,000 பெட்டி பீர் வகைகளும்; 1.80 லட்சம் பெட்டி மது வகைகளும் விற்பனையாகின்றன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, சமீப காலமாக பீர் விற்பனை மாதந்தோறும் சராசரியாக, 4 - 5 லட்சம் பெட்டிகள் குறைந்து வருகிறது.
கடந்த ஆகஸ்டில் பீர் விற்பனை, 30.51 லட்சம் பெட்டிகளாக இருந்தது. இது, 2023 அதே மாதம், 34.55 லட்சம் பெட்டிகளாக அதிகரித்திருந்தது. இந்தாண்டு ஜூலையில் பீர் விற்பனை, 30.65 லட்சம் பெட்டிகளாக இருந்தது.
கடந்த ஆண்டு ஆகஸ்டில், 56.67 லட்சம் பெட்டிகளாக இருந்த மது வகைகள் விற்பனை, இந்தாண்டு ஆகஸ்டில், 57.57 லட்சம் பெட்டிகளாக சற்று அதிகரித்துள்ளது.
பீர் விற்பனை குறைவது குறித்து, டாஸ்மாக் ஊழியர்கள் கூறியதாவது:
மது கடைகளில் பீர் வாங்குவதில் இளம் வயதினர் தான் அதிகம் உள்ளனர். தற்போது, கஞ்சா, குட்கா, மாவா உள்ளிட்ட போதை பொருட்களை இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். விரும்பி வாங்கப்படும் பீர் வகைகளை, மாவட்ட மேலாளர்கள் கிடங்குகளில் இருந்து கடைகளுக்கு அனுப்புவதில்லை. இதுபோன்ற காரணங்களால் தான், பீர் விற்பனை குறைகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முறைகேடாக விற்பது தடுப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளச்சாராய உயிரிழப்புக்கு பின், மதுக்கூடங்கள் உள்ளிட்ட இடங்களில் சட்ட விரோத மது விற்பனையை தடுக்கும் பணி முழுவீச்சில் நடக்கிறது. இதனால், மது கடைகளில் இருந்து மொத்தமாக வாங்கி, முறைகேடாக விற்பது தடுக்கப்பட்டுள்ளது. இதுவே, பீர் விற்பனை குறைவிற்கு காரணம்.
- பொதுமேலாளர்
டாஸ்மாக்.