ரயிலில் தவறி விழுந்த கர்ப்பிணி பலி வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் பரிதாபம்
ரயிலில் தவறி விழுந்த கர்ப்பிணி பலி வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் பரிதாபம்
ADDED : மே 04, 2024 12:56 AM

விருத்தாசலம்:தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அடுத்த மேலநீலிதநல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்; சென்னையில் தனியார் நிறுவன ஊழியர். இவர், தன் குடும்பத்துடன் சென்னை திரிசூலம் பெரியார் நகரில் வசிக்கிறார்.
இவரது மனைவி கஸ்துாரி, 20. திருமணமாகி ஒன்பது மாதமாகும் நிலையில், கஸ்துாரி ஏழு மாத கர்ப்பமாக இருந்தார்.
சொந்த கிராமத்தில் நேற்று நடந்த கோவில் திருவிழா மற்றும் 5ம் தேதி கஸ்துாரிக்கு நடக்க இருந்த வளைகாப்பு நிகழ்ச்சிக்காக, நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில், 'எஸ் 9' கோச்சில் கஸ்துாரி மற்றும் உறவினர்கள், 11 பேர் தென்காசி புறப்பட்டனர்.
பயணத்தின் போது கர்ப்பிணியான கஸ்துாரிக்கு திடீர் வாந்தி ஏற்பட்டதால், கோச்சில் இருந்த வாஷ் பேசினுக்கு சென்று வாந்தி எடுத்து விட்டு, களைப்பில் அருகில் இருந்த கதவில் சாய்ந்திருந்தார். அப்போது, கதவு காற்றில் கஸ்துாரி மீது இடித்ததில், தடுமாறி ரயிலில் இருந்து வெளியே விழுந்தார்.
இதை கண்டு திடுக்கிட்ட உறவினர்கள் கூச்சலிட்டபடி, ரயிலில் இருந்த அபாய சங்கிலியை இழுத்தனர். ஆனால், அதிவேகத்தில் சென்ற ரயில் 8 கி.மீ., துாரம் உள்ள கோ.பூவனுார் நிலையத்தில் தான் நின்றது. அங்கு இறங்கிய உறவினர்கள் கதறியபடி கஸ்துாரியை தேடினர். 15 நிமிடம் தேடியும் கஸ்துாரி கிடைக்காத நிலையில், ரயில் புறப்பட்டு, 20 நிமிடம் தாமதமாக விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷனுக்கு வந்தது.
அங்கு, கஸ்துாரியின் உறவினர்கள் ரயில்வே போலீசாரிடம் முறையிட்டனர். ரயில்வே போலீசார், கஸ்துாரியின் உறவினர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று அவரை தேடினர்.
மூன்றரை மணி நேர தேடுதலுக்கு பின், இரவு 11:00 மணிக்கு, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த பூ.மாம்பாக்கம் அருகே கஸ்துாரி உடலை கண்டுபிடித்தனர்.
உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கஸ்துாரி தவறி விழுந்தாரா அல்லது வேறு காரணமா என போலீசார் விசாரிக்கின்றனர்.