ADDED : மே 29, 2024 12:59 AM
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகத்தில் அநேக இடங்களில், வெப்பத்தின் தாக்கம் கடுமையாக உள்ளது. அடுத்து வரும் நாட்களில், பெரும்பாலான இடங்களில் இயல்பைவிட சற்று அதிகமாகவே வெப்பநிலை பதிவாகும்.
சென்னை மற்றும் உள் மாவட்டங்களில் சமவெளி பகுதிகளில், வெப்பத்தின் அளவு அதிகமாக பதிவாகும். நேற்று மாலை நிலவரப்படி, சென்னையில் நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் பகுதிகளில், மிக அதிகபட்சமாக, 106 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 41.3 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் பதிவானது.
இதற்கு அடுத்தபடியாக, திருத்தணி, வேலுாரில், 104 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 40.2 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் நிலவியது. கடலுார், மதுரை நகரம், மதுரை விமான நிலையம், நாகப்பட்டினம், திருப்பத்துார் மற்றும் தஞ்சையில், 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியசுக்கு அதிகமாக வெப்பம் பதிவானது.
மிதமான மழை
தமிழக தென் மாவட்டங்களின் மீது, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. வரும், 30ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், ஜூன் 3 வரை மிதமான மழை பெய்யலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை, 41 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாகலாம்.
குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டி, தென்தமிழக கடலோர பகுதிகளில், மே, 31 வரை சூறாவளி காற்று மணிக்கு, 45 முதல் 55 கி.மீ., வேகத்திலும் இடையிடையே, 65 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும். அதனால், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நேற்று முன்தினம் வெயில் மீண்டும் சுட்டெரித்ததால், ஒரே நாளில் மின் தேவை, 3,200 மெகா வாட் அதிகரித்து, 17,400 மெகா வாட்டாக உயர்ந்து உள்ளது.