இது வழக்கமான தேர்தல் அல்ல: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
இது வழக்கமான தேர்தல் அல்ல: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
ADDED : மார் 21, 2024 05:43 PM

சென்னை: நடைபெறவிருப்பது வழக்கமான தேர்தல் அல்ல, ஜனநாயக அறப்போர் என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உண்மையான புதிய இந்தியாவை கட்டமைத்திடும் உன்னத லட்சியத்துடன் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து திமுக களம் காண்கிறது. நடைபெறவிருப்பது வழக்கமான தேர்தல் அல்ல, ஜனநாயக அறப்போர். இந்த முறை யார் ஆட்சிக்கு வரவே கூடாது என்பதற்கான தேர்தல் களமாக அமைந்துள்ளது. மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திட வேண்டும் என்ற உத்வேகத்துடன் களப்பணியாற்றிட வேண்டும்.
ஜனநாயகம் காக்கும் அறப்போரில் வெற்றி நிச்சயம்! நாற்பதும் நமதே! நாடும் நமதே!. லோக்சபா தேர்தல் களத்தில் நாம் சந்திக்கும் எதிரிகள் நமக்கான அரசியல் எதிரிகள் மட்டுமல்ல, இந்தியாவின் எதிரிகள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எதிரிகள். இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எதிரிகள்.
இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும் மதச்சார்பின்மைக் கொள்கைக்கும் எதிரிகள். கூட்டாட்சிக் கருத்தியலுக்கு எதிரிகள். மொத்தமாகச் சொல்வதென்றால், மனித குலத்தின் எதிரிகள். இதுவரை நடைபெற்ற தேர்தல்கள் அனைத்தும் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை முடிவு செய்வதற்கான தேர்தல்களாக இருந்தன.
இந்த முறை யார் ஆட்சிக்கு வரவே கூடாது என்பதற்கான தேர்தல் களமாக அமைந்துள்ளது. இது வெறும் தேர்தல் களமல்ல.. ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய அறப்போர்க்களம். இந்தப் போரில் நாம் வென்றாக வேண்டும். ஓயாது உழைத்தால் உறுதியான வெற்றி நிச்சயம். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

