கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து ஜிப்மரில் சிகிச்சை பெற்ற 2 பேர் பலி
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து ஜிப்மரில் சிகிச்சை பெற்ற 2 பேர் பலி
ADDED : ஜூன் 27, 2024 03:27 AM
புதுச்சேரி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்தனர்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட பெரியசாமி, மகேஷ், கண்ணன், முருகன், பரமசிவம், சிவராமன், ராமநாதன், ஏசுதாஸ் உள்ளிட்ட 20 பேர் ஜிப்மரில் கடந்த 19ம் தேதி அனுமதிக்கப்பட்டனர். இதில், 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மீதமுள்ள 17 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 6 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
11 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த கள்ளக்குறிச்சி, கருணாபுரம், வெள்ளையன்மேடு தெருவைச் சேர்ந்த ஏசுதாஸ், 35; கருணாபுரம், கோட்டைமேடு ராமநாதன், 62; ஆகியோர் உயிரிழந்தனர்.
இதன் மூலம் ஜிப்மரில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. தற்போது 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.