15 பேரை திருமணம் செய்த 'கல்யாண ராணி' போலீஸ் - சர்வேயரை ஏமாற்றியது அம்பலம்
15 பேரை திருமணம் செய்த 'கல்யாண ராணி' போலீஸ் - சர்வேயரை ஏமாற்றியது அம்பலம்
ADDED : ஜூலை 07, 2024 02:28 AM

திருப்பூர்:திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை சேர்ந்தவர், 29 வயது வாலிபர். விவசாயியான இவர் கடந்த மார்ச்சில், 'அன்பே' என்ற செயலி வாயிலாக, ஈரோடு, கொடுமுடியை சேர்ந்த சத்யா, 32, என்பவருடன் பேசி, பழகி வந்தார்.
இப்பழக்கம் தொடர்ந்து நீடித்ததால், தமிழ்ச்செல்வி என்பவர் வாயிலாக, பெற்றோர் சம்மதத்துடன் கடந்த மாதம், 21ம் தேதி அந்த வாலிபருக்கும், பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.
சந்தேகம்
திருமணத்தின் போது, 12 சவரன் நகையை அப்பெண்ணுக்கு அணிவித்தனர். திருமணத்துக்கு பின் அப்பெண்ணின் நடவடிக்கையில் வாலிபருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
பல ஆண்களிடம் பேசி வருவது குறித்து தெரிந்ததால், அது குறித்து வாலிபர் கேட்டதற்கு, 'நான் 15 பேருக்கும் மேல் திருமணம் செய்து ஏமாற்றியுள்ளேன்; உன்னையும் ஏமாற்றியுள்ளேன்' என, கூறியுள்ளார்.
அடுத்த நாளே, அப்பெண் தலைமறைவானார். பாதிக்கப்பட்ட வாலிபர் தாராபுரம் போலீசில் புகார் அளித்தார். நேற்று வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை துவக்கினர்.
போலீசார் கூறியதாவது:
ஈரோட்டை சேர்ந்த சத்யா என்ற பெண், பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்தது தொடர்பாக விசாரித்தோம். தமிழ்செல்வி, 34, என்ற புரோக்கர் வாயிலாக பல ஊர்களில் திருமணத்துக்காக காத்திருப்பவர்களை அறிந்து, அவர்களை திருமணம் செய்து, பணம், நகையுடன் தலைமறைவாகியுள்ளனர்.
அவமானம்
இதுவரை இந்த மாதிரி 15க்கும் மேற்பட்டோரை ஏமாற்றியுள்ளனர். கரூரை சேர்ந்த போலீஸ் எஸ்.ஐ., - சர்வேயர், அரசியல்வாதி என பல ஆண்களையும் ஏமாற்றியுள்ளனர். இது தொடர்பாக வெளியில் தெரிந்தால் அவமானம் என்று நினைத்து, யாரும் புகார் கொடுக்கவில்லை. இருவரும் பிடிபடும் பட்சத்தில், முழுமையான விவரம் தெரிய வரும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.