தென்பெண்ணையாற்றில் கர்நாடக மாசு; மத்திய அதிகாரிகள் குழுவினர் ஆய்வு
தென்பெண்ணையாற்றில் கர்நாடக மாசு; மத்திய அதிகாரிகள் குழுவினர் ஆய்வு
UPDATED : ஜூன் 10, 2024 07:24 AM
ADDED : ஜூன் 10, 2024 12:35 AM

ஓசூர் : கர்நாடகா மாநிலம், நந்திமலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணையாறு, 112 கி.மீ., பயணித்து, தமிழக எல்லையான சிங்கசாதனப்பள்ளியை அடைகிறது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, வேலுார், விழுப்புரம், கடலுார் மாவட்டங்கள் வழியாக, 430 கி.மீ., பயணித்து வங்கக்கடலில் கலக்கிறது.
கர்நாடகா மாநிலத்தில் தொழிற்சாலை மற்றும் குடியிருப்புகளின் கழிவுநீர் நேரடியாக கலப்பதால், தென்பெண்ணையாற்று நீர் மாசடைந்துள்ளது.
இந்த நீரை ஓசூர், கெலவரப்பள்ளி அணையில் தேக்கி, உபரிநீரை ஆற்றில் வெளியேற்றும்போது ரசாயன நுரை பெருக்கெடுக்கிறது.
இதனால் நீரை விவசாயம் மற்றும் இதர பயன்பாட்டுக்கு பயன்படுத்த முடியவில்லை. இந்த நீரே கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கும் செல்கிறது.
கடந்த மாதம் கெலவரப்பள்ளி அணையிலிருந்து சென்ற ரசாயன நீரால், கே.ஆர்.பி., அணையில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதந்தன.
இதற்கிடையே, தென்பெண்ணை ஆற்று நீரை தடுக்கும் கட்டமைப்புகளையும் கர்நாடகா உருவாக்கி உள்ளது.
தென்பெண்ணையாறு பிரச்னைக்கு தீர்வு காண, உச்ச நீதிமன்ற உத்தரவின் படி, மத்திய நீர்வளத்துறை ஆணையர் குஷ்விந்தர் ஹோக்ரா தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இதில், தமிழகம் சார்பில் மாநில நதிகள் பிரிவு தலைவர் சுப்பிரமணியன், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் அசோகன் இடம் பெற்றுள்ளனர்.
குஷ்விந்தர் ஹோக்ரா தலைமையிலான குழு, கர்நாடகா மாநில தென்பெண்ணையாற்று பகுதியில் ஆய்வு செய்த நிலையில், தமிழக எல்லையான ஓசூர் கெலவரப்பள்ளி அணை, கொடியாளம், சொக்கரசனப்பள்ளி ஆகிய பகுதிகளில் நேற்று காலை ஆய்வு செய்தனர். பின், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை பகுதியிலும் ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து குழுவினர் கூறுகையில், 'தற்போது ஆய்வு தான் மேற்கொண்டுள்ளோம். இதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
ஆய்வின்போது பெண்ணையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் செந்தில்குமார், கண்காணிப்பு பொறியாளர் குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.