காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும்: தமிழக அரசு வலியுறுத்தல்
காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும்: தமிழக அரசு வலியுறுத்தல்
ADDED : செப் 13, 2024 05:32 AM

'உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, வரும் மாதங்களில் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நீரை திறந்து விடுவதை கர்நாடகா உறுதிசெய்யும்படி உத்தரவிட வேண்டும்' என்று, காவிரி ஒழுங்காற்று குழுவில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
காவிரி ஒழுங்காற்று குழுவின் ஆலோசனைக் கூட்டம் குழுவின் தலைவர் வினீத் குப்தா தலைமையில், டில்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநில உறுப்பினர்கள், வீடியோ கான்பரன்சிஸ் வாயிலாக மாநில தலைமைச் செயலகங்களில் இருந்து பங்கேற்றனர்.
தமிழக அரசின் சார்பில், திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாளகுமார் பங்கேற்றார். இந்த கூட்டத்தில், கடந்த ஜூன் 1 முதல் செப்., 10 வரையிலான காலகட்டத்தில், தமிழகத்தின் மேட்டூர், பவானிசாகர் மற்றும் அமராவதி அணைகளின் நீர் இருப்பு மற்றும் அணைக்கு வரும் நீர்வரத்து ஆகிய விபரங்களை தமிழக அரசு தெரிவித்தது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, இதே காலகட்டத்தில் 98.633 டி.எம்.சி., நீர் தரவேண்டும். ஆனால், கனமழை காரணமாக, 191.660 டி.எம்.சி., பெறப்பட்டுள்ள விபரத்தையும் தமிழக அரசு தெரிவித்தது. மேலும், தற்போது மேட்டூர் அணையில், 84.431 டி.எம்.சி., அடி நீர் இருப்பதாகவும், அணையிலிருந்து, 23,674 கனஅடி நீர் பாசனத்திற்காக வெளியேற்றப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற இந்திய வானிலை ஆய்வுத் துறையின் உறுப்பினர், 'கடந்த ஜூன் 1 முதல் செப்., 10 வரை காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் இயல்பான அளவை விட அதிகமாக தென்மேற்கு பருவ மழை பெய்துள்ளது. ஆனாலும், இந்த பருவமழை அடுத்த இரண்டு வாரத்திற்கு இருக்காது. இயல்பை விட குறைவாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
இறுதியாக, இந்த ஆண்டு தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நீரை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, வரும் மாதங்களில் பிலிகுண்டுலுவில் திறப்பதை கர்நாடகா உறுதி செய்ய, ஒழுங்காற்றுக்குழு உத்தரவிட வேண்டும் என்று, தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து, தமிழகம், புதுச்சேரி மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நீரின் அளவை, இனி வரும் நாட்களில் மாத வாரியாக கர்நாடக அரசு அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும், கர்நாடகாவின் கே.ஆர்.எஸ்., அணையில் உள்ள நீரின் இருப்பு மற்றும் நீர்வரத்து ஆகிய விபரங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
- நமது டில்லி நிருபர் -