கவரைப்பேட்டை ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா? வெளிவராத பின்னணி தகவல்கள்
கவரைப்பேட்டை ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா? வெளிவராத பின்னணி தகவல்கள்
UPDATED : அக் 12, 2024 03:16 PM
ADDED : அக் 12, 2024 07:20 AM

திருவள்ளூர்; கவரைப்பேட்டை ரயில் விபத்து நிகழ்ந்த இடத்தில் தண்டவாளங்களின் இணைப்பு துண்டிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால் நாசவேலை காரணமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
விபத்து
மைசூரில் இருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே நேற்றிரவு(அக்.11) விபத்துக்குள்ளானது. தண்டவாளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சரக்கு ரயிலின் மீது மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்தின் போது எக்ஸ்பிரஸ் ரயிலில் மொத்தம் 1,650 பயணிகள் இருந்துள்ளனர்.
பேரிடர் குழு
ரயில் பெட்டிகள் தடம்புரண்டதோடு, இருட்டு நேரம் என்பதால் மீட்புப் பணிகளில் சிக்கல் எழுந்தது. உள்ளூர் மக்கள் முதல்கட்டமாக பயணிகளை மீட்க ஆரம்பித்தனர். மொத்தம் 13 ரயில் பெட்டிகள் தடம்புரண்டன. விபத்து குறித்து தகவலறிந்த ரயில்வே உயரதிகாரிகள், ஊழியர்கள், பேரிடர் மீட்புக்குழுவினர் உள்ளிட்டோர் சம்பவ பகுதிக்கு விரைந்து வந்தனர். ரயில் விபத்து குறித்து உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
சிகிச்சை
விபத்தில் சிக்கியவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு அமைச்சர் ஆவடி நாசர், திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் நேரில் சென்றனர். துணை முதல்வர் உதயநிதி நள்ளிரவில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்தார். நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.
ரயில்கள் ரத்து
விபத்து காரணமாக திருப்பதி-புதுச்சேரி, சென்னை-திருப்பதி உள்ளிட்ட 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. 15 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்க திருப்பவிடப்பட்டு உள்ளன. ரயில் விபத்தை தொடர்ந்து, கிரேன் உதவியுடன் தடம்புரண்ட பெட்டிகளை மீட்கும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகளும் முடுக்கி விடப்பட்டு உள்ளன.
என்ன நடந்தது?
இந்நிலையில், விபத்து நிகழ்ந்தது எப்படி என்பது பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. மைசூரில் இருந்து வந்த பாக்மதி ரயில் சென்னை பெரம்பூரில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு உள்ளது. அங்கிருந்து சரியாக 8.27 மணிக்கு பொன்னேரி ரயில் நிலையம் வந்து சேர்ந்தது. கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு நிறுத்தம் கிடையாது. மெயின் லைன் வழியாக தான் ரயில் செல்ல வேண்டும்.
லூப் லைன்
ரயில் செல்வதற்கு ஏற்ப, க்ரீன் சிக்னலும் ரயில்வே தரப்பில் கொடுக்கப்பட்டது. ஆனால், பயணிகள் ரயில் மெயின் லைனில் செல்வதற்கு பதிலாக, லூப் லைனில் சென்றுள்ளது. அந்த லைனில் சரக்கு ரயில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தண்டவாளத்தில் வந்த அதே வேகத்தில் சரக்கு ரயிலின் பின்னால் பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
நாசவேலையா?
விபத்து நிகழ்ந்த இடத்தில் தண்டவாளங்களின் இணைப்பு துண்டிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே இந்த விபத்துக்கு ஏதேனும் நாசவேலை காரணமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். தண்டவாளத்தின் இணைப்பு கம்பிகள் கழற்றப்பட்டு உள்ள புகைப்படமும் வெளியாகி இருக்கிறது.