அருந்தியர் உள் ஒதுக்கீடு ரத்து செய்ய கவர்னரிடம் கிருஷ்ணசாமி மனு
அருந்தியர் உள் ஒதுக்கீடு ரத்து செய்ய கவர்னரிடம் கிருஷ்ணசாமி மனு
ADDED : நவ 08, 2024 07:56 PM
சென்னை:'அருந்ததியர் சமுதாயத்திற்கு, 3 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்' என்பது உட்பட, ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கவர்னர் ரவியிடம், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, நேற்று மனு அளித்தார்.
அதில் கூறியிருப்பதாவது:
கடந்த 2010ம் ஆண்டு, அருந்ததியருக்கு 3 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கி, அரசாணை வெளியிடப்பட்டது. இது, பட்டியல் இனப் பிரிவில் பெரும்பான்மையாக உள்ள, தேவேந்திர குல வேளாளர் மற்றும் சாம்பவர் எனும் பறையர் இன மக்களின் சட்டரீதியான இட ஒதுக்கீடு உரிமைகளை தட்டிப் பறித்து விட்டது. எனவே, உள் இடஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். தென் மாவட்டங்களில், தேவேந்திர குல வேளாளர்களுக்கு எதிராக நடத்தப்படும் அனைத்து கொலை வெறி தாக்குதல் சம்பவங்களையும், தேசிய புலனாய்வு அமைப்பு வழியாக விசாரிக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே, அது நியாயமான விசாரணையாக இருக்கும்.
வெளிநாட்டு முதலீட்டிலான தொழிற்சாலைகளை, தென் மாவட்டங்களில் துவக்க வேண்டும். தொழிற்சாலைகளின் கட்டுமானப் பணி போன்ற கடுமையான பணிகளுக்கு, தென் மாவட்ட மக்களை பயன்படுத்திக் கொண்டு, தொழிறசாலை இயங்குகிறபோது, பிற மாநிலத்தை சார்ந்தவர்களுக்கு, உயர் பதவிகளில் முன்னுரிமை வழங்கக்கூடாது.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.