மலை கிராமத்திற்கு இரவில் பயணித்து பிரசவம் பார்த்த குழுவினருக்கு பாராட்டு
மலை கிராமத்திற்கு இரவில் பயணித்து பிரசவம் பார்த்த குழுவினருக்கு பாராட்டு
ADDED : மே 09, 2024 11:23 PM

தேன்கனிக்கோட்டை : கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த குல்லட்டி கவுண்டனுார் மலை கிராமத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இக்கிராமத்தை சேர்ந்த கெண்டன் மனைவி ருத்ரி, 20, நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று முன்தினம் இரவு அவருக்கு திடீரென ரத்த அழுத்தமும், பிரசவ வலியும் ஏற்பட்டது.
கெலமங்கலம் வட்டார மருத்துவர் ராஜேஷ்குமார் மற்றும் மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் இருசக்கர வாகனங்களில் குல்லட்டி கவுண்டனுார் கிராமத்திற்கு இரவில் விரைந்தனர்.
குல்லட்டி கவுண்டனுார் செல்லும் சாலை, மிகவும் ஆபத்தான, கரடு முரடானது மட்டுமின்றி, இரவில் யானைகள், காட்டெருதுகள் சுற்றித்திரியும். இருப்பினும், நடமாடும் ஆம்புலன்சில் ருத்ரிக்கு பிரசவம் பார்த்தனர்.
இதில், அவருக்கு, 2 கிலோ எடையுடன் அழகிய பெண் குழந்தை பிறந்தது. ருத்ரிக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததால், ஆம்புலன்சில் உனிசெட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று, முதலுதவி சிகிச்சை அளித்த பின், ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவ குழுவினருக்கு மலை கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.