'வழக்குகள் பெருமளவு தேங்கி கிடப்பதற்கு வக்கீல்கள் ஒத்துழைப்பின்மையே காரணம்'
'வழக்குகள் பெருமளவு தேங்கி கிடப்பதற்கு வக்கீல்கள் ஒத்துழைப்பின்மையே காரணம்'
ADDED : ஆக 30, 2024 03:10 AM

சென்னை: வருமான வரி விதிப்பு தொடர்பாக, கோவையை சேர்ந்த லீலாவதி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி நேற்று தீர்ப்பு வழங்கினார். மேலும், தனது உத்தரவில் அவர் கூறியதாவது:
அரசு துறைகளின் வழக்கறிஞர்கள் கோருவதால், பதில் மனு தாக்கல் செய்வதற்காக, அவ்வப்போது வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்படுகிறது. ஒரு வழக்கில், ஏழு முறை தள்ளி வைத்தும், 8வது முறையாக அவகாசம் கேட்டதால், இந்த நீதிமன்றம் அபராதம் விதித்தது.
இந்த வழக்கை பொறுத்தவரை, விசாரணைக்கு எடுக்கப்பட்ட முதல் நாளிலேயே, வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.ராமசாமி, பதில் மனுத்தாக்கல் செய்தார். அவரது முயற்சியை, இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது.
விசாரணையை தள்ளிவைக்க கோராமல், பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார். விசாரணையின் முதல் நாளிலேயே, அவரால் பதில் மனுத் தாக்கல் செய்ய முடியும் போது, மற்ற வழக்கறிஞர்களால் ஏன் முடியவில்லை.
நீதிமன்றகளால் தான், வழக்குகள் தேக்கம் அடைவதாக பொது மக்கள் கருதுகின்றனர். ஆனால், இரு தரப்பிலும் வாதங்களை வைக்கும் நிலையில், வழக்கை பைசல் செய்ய, நீதிமன்றங்கள் முயற்சிகள் எடுக்கின்றன. பெரும்பாலான வழக்குகள் நிலுவையில் இருப்பதற்கு, பதில் மனுத்தாக்கல் செய்யாமல் இருப்பதும், அதிகாரிகள் மற்றும் துறை வழக்கறிஞர்களின் ஒத்துழைப்பின்மையுமே காரணம்.
துறை வழக்கறிஞர்கள், பதில் மனுத்தாக்கல் செய்து, அவகாசம் கோராமல் வாதங்களை முன்வைக்க தயாராக இருக்க வேண்டும். அதனால், நீதிமன்றத்தின் நேரம் மிச்சமாவது மட்டுமின்றி, அதிக எண்ணிக்கையில் வழக்குகளும் பைசல் செய்யப்படும். எனவே, அவகாசம் கோராமல், குறித்த நேரத்தில் பதில் மனுத் தாக்கல் செய்வதற்கு, துறை வழக்கறிஞர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.