பெரிய வெங்காய ஏற்றுமதியால் சின்ன வெங்காயத்துக்கு மவுசு
பெரிய வெங்காய ஏற்றுமதியால் சின்ன வெங்காயத்துக்கு மவுசு
ADDED : மே 09, 2024 01:34 AM
சென்னை:ஏற்றுமதி தடை நீக்கம் காரணமாக, சின்ன வெங்காயத்தின் விலை திடீரென கிலோ 60 ரூபாய்க்கு மேல் உயர்ந்து வருகிறது.
அரியலுார், பெரம்பலுார், திருச்சி, திருப்பூர், ஈரோடு, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட பல மாவட்டங்களில், சின்ன வெங்காயம் சாகுபடி நடந்து வருகிறது. தமிழகத்தில் இருந்து சென்னை துறைமுகம் வழியாக, மலேஷியா, சிங்கப்பூர், துபாய், நேபாளம், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.
கடந்தாண்டு டிசம்பரில், பெரிய வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த, அதன் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது.
இதையடுத்து, சின்ன வெங்காயம் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டது. அதனால், உள்ளூர் சந்தைகளுக்கு சின்ன வெங்காயத்தின் வரத்து அதிகரித்தது.
சென்னை கோயம்பேடு சந்தையில் கிலோ சின்ன வெங்காயம், 30 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது, வெங்காயம் ஏற்றுமதிக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதையடுத்து, சின்ன வெங்காயம் ஏற்றுமதியும் சூடுபிடித்துள்ளது; அதன் விலை மெல்ல உயர்ந்து வருகிறது.
கோயம்பேடு சந்தையில், கிலோ சின்ன வெங்காயம், 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இவற்றை வாங்கி செல்லும் வெளிமார்க்கெட் வியாபாரிகள், மூட்டை கூலி, வாகன வாடகை, லாபம் ஆகியவற்றை கணக்கிட்டு, தங்கள் பகுதிகளுக்கு ஏற்றவாறு கூடுதல் விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.
வெங்காயம் அறுவடை முடிவுக்கு வந்துள்ளதும், கையிருப்பு குறைந்துள்ளதும், விலை அதிகரிப்புக்கு காரணம் என, வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.