ADDED : மே 04, 2024 11:55 PM
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தன்சிங்கை, இரண்டு நாட்களாக காணவில்லை என்று, அவரது மகன் புகார் அளித்திருந்த நிலையில், அவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதை, தினமும் சுட்டிக்காட்டி வருகிறேன். தற்போது ஒரு தேசிய கட்சியின் மாவட்ட தலைவர் பொறுப்பில் உள்ளவரே, எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்படுவது சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்.
தமிழகத்தில் எந்தவொரு குற்றச்செயலையும், சட்டத்தின் மீதோ, காவல் துறை மீதோ, எந்தவித அச்சமுமின்றி சமூக விரோதிகள் செய்ய துணிந்து விட்டனர். ஆட்சியும் அதற்கேற்றார் போல, சட்டம் - ஒழுங்கின் மீது எந்த அக்கறையின்றி, கும்பகர்ண துாக்கத்தில் இருக்கிறது.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை:
காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டுள்ளது, மிகுந்த அதிர்ச்சியை தருகிறது.
கடந்த ஏப்., 30ம் தேதி மாவட்ட எஸ்.பி.,யிடம், தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஜெயக்குமார் புகார் அளித்திருப்பதாக தெரிகிறது. ஆனாலும், காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.
காங்கிரஸ் மாவட்ட தலைவரின் புகாருக்கே, தி.மு.க., ஆட்சியில் இதுதான் நிலைமை என்றால், சாமானிய பொது மக்கள் எதிர்கொள்ளும் சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு குறித்த கேள்வி பலமாக எழுகிறது. மறைந்த ஜெயக்குமார் புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் உடனே, விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை:
ஜெயக்குமார் பிரேத பரிசோதனைக்கு பின், மரணம் எப்படி நடந்தது என்பது தெரியும். காவல்துறை விசாரணையில் உண்மை வெளிக்கொண்டு வரப்படும். யார் தவறு செய்திருந்தாலும், சட்டம் தன் கடமையை செய்யும். கட்சி ரீதியாகவும் விசாரணை மேற்கொள்வோம்.
இறப்பில் எந்த சமாதானமும் கிடையாது. இறந்தது எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர். எங்கள் குடும்பத்தில் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. எப்படி விசாரிக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்.
இதை அண்ணாமலை அரசியலாக்குவது அநாகரிகமற்ற செயல். கட்சியில் எல்லா மாவட்டத்திலும் முரண்பாடு இருக்கும். அதை ஒப்பிட்டு பேசக்கூடாது. காவல் துறையை சுதந்திரமாக விசாரிக்க கூறியுள்ளோம். அவர்கள் விசாரித்து உண்மையை வெளிக் கொண்டு வருவர்.
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்:
காவல் துறை, ஆளுங் கட்சியினரின் ஏவல் துறையாக மட்டுமே செயல்படுவதால், தமிழகத்தில் பொதுமக்கள் துவங்கி, அனைத்து தரப்பினரின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, இனியாவது பொய் வழக்கு பதிவு செய்ய மட்டும் காவல் துறையை பயன்படுத்தாமல், சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளை தடுக்கவும் பயன்படுத்த வேண்டும். ஜெயக்குமார் தனசிங் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொணர வேண்டும்.
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங், கொடூரமான முறையில் எரித்துக் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
காவல்துறையில் புகார் அளித்தும், அவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது, தமிழகத்தில் சட்டம் --- ஒழுங்கு முழுமையாக பாதிக்கப்பட்டிருப்பதையே காட்டுகிறது.
புகார் அளித்த உடனேயே காவல்துறை செயல்பட்டிருந்தால், ஜெயக்குமாரை காப்பாற்றியிருக்கலாம். ஆனால், காவல்துறை செயல்பட தவறி விட்டது. எனவே, அவரது படுகொலைக்கு காவல்துறை தான் பொறுப்பேற்க வேண்டும்.
இந்த கொலையில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். தமிழக காவல்துறை விசாரித்தால் உண்மை வெளிவராது. எனவே, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.